தினமலர் 06.09.2010
ஒப்பந்ததாரர் கூட்டம் நடத்த கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
திருப்பூர் : திருப்பூர், 15 வேலம்பாளையம் நகராட்சியில் வளர்ச்சி பணிகள் பாதியில் நிற்கின்றன. நிதி ஒதுக்கிய பின், சில பணிகளை துவக்க தாமதம் ஏற்படுகிறது. இதற்கான காரணம் தெரிந்து கொள்ள, ஒப்பந்ததாரர்களுடன் கூட்டம் நடத்த வேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர், 15 வேலம்பாளையம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. சாக்கடை கால்வாய், பொது கழிப்பிடம், சமுதாயக்கூடம் கட்டுதல், பழுதான சாலையை மேம்படுத்துதல், மேல்நிலைத்தொட்டி கட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்கு டெண்டர் கோரப்படுகிறது. டெண்டர் எடுக்கும் சில ஒப்பந்ததாரர்கள் பணியை முழுவதுமாக முடிப்பதில்லை. குறிப்பாக, சாக்கடை கால்வாய் கட்டும் பணி மந்தகதியில் நடக்கிறது.
இதுகுறித்து கவுன்சிலர்கள் கூறியதாவது: பணிக்காக கொண்டு வரப்படும் பொருட்கள், பணி முடிவடையும் காலம், தரமுடைய பொருட்களா, எத்தனை லோடு கல், மண், ஐல்லி கொண்டு வரப்படுகிறது என்பது குறித்து யாருக்கும் தெரிவதில்லை. இடைத்தரகர் தலையீடு அதிகரித்துள்ளது.
பணியில் திருப்தி இல்லாவிட்டால், ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி பொறியாளர் எச்சரித்தார். நகராட்சி கூட்டத்தை போல், ஒப்பந்ததாரர்களை அழைத்து கூட்டம் நடத்தப்படும் என நகராட்சி தலைவர் தெரிவித்தார். அக்கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும். அப்போது, வளர்ச்சி பணிகள் எங்கெங்கு நடந்து வருகின்றன. எந்தெந்த இடங்களில் பாதியில் நிற்கின்றன. அதற்கு காரணம் என்ன என்பது வெளிச்சத்துக்கு வரும். இவ்வாறு, கவுன்சிலர்கள் கூறினர்.