ஒழுங்கு நடவடிக்கை பாயும் என எச்சரிக்கைரோட்டோர இறைச்சி கடைகளில் ஆய்வு
சேலம்: சேலம் மாநகர பகுதியில் உள்ள ரோட்டோர இறைச்சி கடைகளில், நேற்று மாநகராட்சி அதிகாரிகள், திடீர் ஆய்வு மேற்கொண்டனர். சுகாதாரமற்ற முறையில், இறைச்சி விற்பனை செய்தவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.சேலம் மாநகர பகுதியில், இறைச்சி கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாநகராட்சி சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள இறைச்சி கூடாரங்களில், முறையான ஆய்வுக்கு உட்படுத்தி அறுக்காமல், ரோட்டிலேயே, சுகாதாரமற்ற முறையில், ஆடுகளை அறுத்து விற்பனை செய்து வருகின்றனர். மேலும், மீன், கோழி போன்ற இறைச்சி வகைகளும், விதிமுறைக்கு புறம்பாக விற்பனை செய்யப்படுகிறது.நேற்று முன்தினம் மாநகராட்சி கமிஷனர் அசோகன், “பொதுமக்களுக்கு இடையூறாகவும், சுகாதாரமற்ற முறையிலும், இறைச்சி விற்பனை செய்யக்கூடாது’ என்று வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில், நேற்று, மாநகர நல அலுவலர் (பொறுப்பு)மலர் விழி, மற்றும் மாவட்ட சுகாதார துறை அலுவலர்கள், கோரிமேடு, அஸ்தம்பட்டி, ஐந்து ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள ரோட்டோர கறிக்கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.அனைவரும் விதிமுறைக்கு புறம்பாக கறி விற்பனை செய்தது தெரிய வந்தது. அவர்களை எச்சரிக்கை செய்து, விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர்.இதுகுறித்து மாநகர நல அலுவலர் மலர் விழி கூறியதாவது:சுகாதார ஆய்வாளர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு, சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்பனை செய்பவர்களிடம் இருந்து, இறைச்சி பறிமுதல் செய்யப்படுவதோடு, அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு கூறினார்.