தினமலர் 24.05.2010 ஓட்டல்களில் காய்ச்சிய குடிநீர் வழங்க உத்தரவு
கீழக்கரை: ஓட்டல்களில் காய்ச்சிய குடிநீரை வழங்க வேண்டும் என நகராட்சி கமிஷனர் சுந்தரம் உத்தர விட்டுள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது: ராமநாதபுரம் மாவட்ட சுகாதார துறையின் அறிவுறுத்தலின்படி கீழக்கரை பகுதிகளில் குடிநீர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கீழக்கரையில் வினியோகம் செய்யப்படும் குடிநீரில் குளோரின் கலக்கப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது.
வயிற்று போக்கு தடுக்கும் வகையில் பொதுமக்கள் வீடுகளில் குடிநீரைகொதிக்க வைத்து குடிக்க வேண்டும். சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். ஓட்டல்களில் காய்ச்சிய நீரை வழங்க வேண்டும். திறந்த நிலையில் உணவு பொருட்களை வைக்கக்கூடாது, என கூறியுள்ளார்.