தினமலர் 23.11.2010
ஓட்டல்களுக்கு காவிரி குடிநீர் நகராட்சிலாரி மூலம் சப்ளை
ராமநாதபுரம்
: ராமநாதபுரத்தில் தனியார் ஓட்டல்களுக்கு நகராட்சி குடிநீர் லாரி மூலம் காவரிகுடிநீர் வினியோகம் செய்வது தொடர்ந்து வரும் நிலையில், அதிகாரிகள் வேடிக்கை பார்த்து வருகின்றனர். மாவட்டத்தில் காவிரி நீர் வினியோகம் பல வழிகளில் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் ராமநாதபுரம் நகராட்சிக்கு வரும் நீரை ஓட்டல்களுக்கு வினியோகித்து வருகின்றனர். இதற்காக நகராட்சி வாகனங்களே பயன்படுத்துவதும் தொடர்கிறது. ஒவ்வொரு நாளும் இதற்காக நகராட்சி வாகனங்கள் வெளியில் சென்ற போதும், அதை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது சந்தேகத்தை கிளப்பியுள்ளது. இந்த நூதன விற்பனையில் பெரிய அளவில் பணபரிமாற்றம் நடப்பதாக குற்றசாட்டும் எழுந்துள்ளது.மக்களுக்கு காவிரி நீர் வரவில்லை என்ற குற்றசாட்டு பரவலாக இருந்து வரும் நிலையில்
, தனிநபர் லாபத்திற்காக அரசு இயந்திரத்தை பயன்படுத்தி வருவது வேதனைக்குறியதாகும். மாவட்டம்தோறும் காவிரி குடிநீர்வினியோகம் குறித்து ஆய்வு நடத்தி வரும் அதிகாரிகளுக்கு, மாவட்ட தலைநகர் ராமநாதபுரத்தில் நடந்து வரும் இந்த கூத்து தெரியாமல் போனது வேதனைக்குறியது தான். அரசையும் ஏமாற்றி, பொதுமக்களுக்கும் துரோகம் விளைவிக்கும் இந்த செயலை இனியும் அனுமதித்தால், காவிரி நீரை லாரியில் ஏற்றி விற்கும் அவலநிலையும் ஏற்படலாம். கலெக்டர் ஹரிஹரனிடம் கேட்ட போது,”” ஓட்டல்களுக்கு நகராட்சி வாகனங்களில் குடிநீர் சப்ளை செய்வதை அனுமதிக்க முடியாது. இது குறித்து நகராட்சி கமிஷனரின் கவனத்துக்கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.