தினமலர் 01.02.2010
ஓட்டல், டீக்கடைகளில் சுகாதாரம் கேள்விக்குறி : தேவை அதிகாரிகளின் நடவடிக்கை
சிவகங்கை : சுகாதாரமற்ற முறையில் செயல்படும் ஓட்டல்கள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கிராமப்புறங்களை அதிகம் கொண்ட சிவகங்கையில் தொழில் வளர்ச்சி இல்லாத நிலையில் பெரும்பாலானோருக்கு தெரிந்த தொழில் வடை கடை அல்லது இட்லி கடை நடத்துவது தான். சந்து, சாக்கடை, குப்பைமேடு என்று எதையும் பார்க்காமல் கூட்டம் அதிகம் நிறைந்த பகுதிகளில் ஒரு டேபிளை வைத்து இட்லி, வடைபோன்றவைகளை சுட்டு விற்பனை செய்கின்றனர். இதற்கு வாடகை, லைசென்ஸ், கட்டடம், பெரிய அளவில் முதலீடு எதுவும் தேவையில்லை. அதனால் இந்த தொழிலை பலரும் எளிதாக துவக்கி விடுகின்றனர்.
நகராட்சி சட்டப்படி கடைகளில் விற்கப்படும் உணவு பொருட்கள், சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டு இருக்க வேண்டும். கலப்படம் செய்யப்பட்டு இருக்க கூடாது. சுற்றுச்சூழல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கழிவு நீரை முறைப்படி வெளியேற்றி, பொது சுகாதாரத்தை மாசுபடுத்த கூடாது.
சிவகங்கை மாவட்டம் முழுவதும் உள்ள பெரும்பாலான ஓட்டல் கள், டீக்கடைகளில் இந்த நடைமுறையை கடைப்பிடிப்பதில்லை. சுகாதாரமற்ற சூழ்நிலையில் விற்கப்படும் பொருட்கள் அமோகமாக விற்பனை செய்யப்படுகிறது. சமையலுக்கு பெயர் போன காரைக்குடி போன்ற பகுதியை சேர்ந்த மக்களும் இவற்றை ருசித்து சாப்பிடுகின்றனர். சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டிய நகராட்சியும் கொள்வதில்லை.
லைசென்ஸ்: ஓட்டல் அல்லது டீக்கடை துவங்க வேண்டுமானால் மாநகராட்சியில் “டி அண்டு ஓ லைசென்ஸ்‘ என அழைக்கப்படும் அபாயகரமானதும், ஆட்சேபகராமான தொழிலுக்கான உரிமம் பெறப்பட வேண்டும். இதில் லைசென்ஸ்சிற்கு 100 ரூபாயும், உணவு கலப்பட தடை சட்ட பிரிவிற்கு 25 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்.
தொழிலைப் பொறுத்து நகராட்சி, பேரூராட்சிகளில் கட்டணம் மாறுபடும். ஒவ்வொரு வருடமும் லைசென்ஸை புதுப்பிக்க வேண்டும். சுகாதாரமற்ற ஓட்டல்கள், டீக்கடைகளின் லைசென்சை நகராட்சி ரத்து செய்யலாம். அல்லது அபராதம் விதிக்கலாம். மாவட்டத்தில் ஆய்வாளர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல காரணங்களை கூறி ஓட்டல்களில் சோதனை செய்வதில்லை.
நகராட்சி அதிகாரி கூறியதாவது: மாவட்டத்தில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் இருக்கிறது. இதில் 200 க்கும் மேற்பட்ட கடைகள் லைசென்ஸ் இல்லாமல் நடத்தப்படுகிறது. லைசென்ஸ் பெறாத கடைகள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த ஆண்டுக்கு பிப்.28க்குள் புதுப்பித்து, புதிய லைசென்சிற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு அபராதம் கிடையாது. அடுத்த மாதம் முதல் லைசென்ஸ் பெறாத கடைகள் மீது உணவு கலப்பட தடை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
டாக்டர் அன்புவேல் கூறியதாவது: நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் அதிகமாக எண்ணெய் கலந்த பொருட்களை உண்பதை தவிர்க்க வேண்டும். ஒரு முறை சுடவைத்த எண்ணெயை மீண்டும் சுடவைப்பதால் அது கார்சினோசென் எனும் வேதப்பொருளாக மாறி உடல் நலத்திற்கு கேடுவிளைவிக்கிறது. எண்ணெய் கலந்த பொருட்களை அதிகம் உட்கொள்வதால் அல்சர், ஒவ்வாமை, ரத்த அழுத்தம் போன்ற நோய்களும் அதனை தொடர்ந்து குடல் கேன்சர், பக்கவாதம், இருதய நோய், கல்லீரல் புற்று நோய்களும் வர அதிக வாய்ப்பு உள்ளது, என்றார்.பொது மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க ஓட்டல், டீக்கடைகளில் அடிக்கடி சோதனை செய்ய நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.