தினமலர் 01.06.2010
ஓட்டல், பேக்கரிகளில் அதிகாரிகள் சோதனை
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையத்தில் உள்ள கடைகளில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று, நகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர்.
நகராட்சி கமிஷனர் சுந்தரம் உத்தரவின் பேரில், நகர் நல அலுவலர் பிரதீப் கிருஷ்ணகுமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் நல்லுசாமி, சரவணன், செந்தில்குமார், அங்குராஜ் மற்றும் உதவியாளர்கள் சோதனையில் ஈடுபட்டனர். குளிர்பான பாட்டில் கிடங்கில் ஆய்வு செய்து, காலாவதியான பாட்டில்களை திறந்து கீழே ஊற்றினர். நகர்நல அலுவலர் பிரதீப் கிருஷ்ணகுமார் கூறியதாவது: தரமான பொருட்களை மட்டும் வாங்கி உபயோகப்படுத்த வேண்டும், சுத்தமான பொருட்களை சுகாதாரமான இடத்தில் விற்பனை செய்ய வேண்டும், என்ற விழிப்புணர்வை பொதுமக்கள், கடை வியாபாரிகளுக்கு ஏற்படுத்தவே இதுபோன்ற அதிரடி சோதனை நடத்தப்படுகிறது. பேக்கரிகளில் எண்ணெய் பலகாரங்களை, கண்ணாடி பெட்டியில் வைத்து விற்பனை செய்ய வேண்டும். ரோட்டின் ஓரத்தில் “ஈ‘க்கள் மொய்க்கும் உணவு பொருட்களை வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும், என்றார்.