தினமணி 24.08.2010
கடையநல்லூரில் தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை தொடக்கம்
கடையநல்லூர், ஆக. 23: கடையநல்லூர் நகராட்சிப் பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களைக் கண்டறிந்து அவற்றுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்யும் பணி மற்றும் வெறிநாய் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
நகராட்சி நிர்வாக இயக்குநர் உத்தரவின் படி, கடையநல்லூர் நகராட்சி நிர்வாகமும், அவார்டு தொண்டு நிறுவனமும் இணைந்து தெருநாய்களை கணக்கெடுத்தது.
இதில் 424 நாய்கள் இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டு அதில் முதற்கட்டமாக 90 நாய்கள் பிடிக்கப்பட்டு அவற்றிற்கு வெறிநாய் தடுப்பூசி மற்றும் கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
கால்நடை மருத்துவர் ஆனந்த் சிகிச்சை அளித்தார்.
இப்பணியினை நகர்மன்றத் தலைவர் இப்ராஹிம், ஆணையர் அப்துல்லத்தீப், சுகாதார அலுவலர் கணேசமூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் பிச்சையா பாஸ்கர், கைலாசசுந்தரம், தொண்டு நிறுவன இயக்குநர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.