தினமணி 26.03.2010
கடையநல்லூர் பாப்பான்கால் ஆக்கிரமிப்புக்கு மாற்று ஏற்பாடு செய்தபிறகே குடியிருப்புகளை அகற்றவேண்டும்
கடையநல்லூர், மார்ச் 25: திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் பாப்பான் கால்வாய் ஓடைப்பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றுவதற்கு முன்னர், அங்கு குடியிருப்பவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்திட வேண்டுமென பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை அவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கடையநல்லூர், கருப்பாநதி பாப்பான் கால்வாயின் இருபுறமும் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள குடியிருப்பு வீடுகளை அகற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் முன்னேற்பாடுகளைச் செய்து வருவதாகத் தெரிகிறது. கால்வாயின் நீர்ப் போக்குவரத்தை தடங்கல் செய்கின்ற ஆக்கிரமிப்புக்களை அகற்றுவதில் மாற்றுக் கருத்து இல்லை என்றபோதும், சில முக்கிய பிரச்னைகளை மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பாப்பான் கால்வாயில் ஆக்கிரமிப்பு செய்துள்ள பலருக்கு ஏற்கெனவே அரசு முறையான பட்டா வழங்கி, ஆக்கிரமிப்பு இடங்களை அவர்களுக்கே சொந்தமாக்கிக் கொடுத்துள்ளது. அதில், பலர் தாங்கள் பட்டா மூலம் பெற்ற இடங்களை வேறு நபருக்கு கிரையம் செய்துள்ளனர். பட்டா வழங்கப்பட்ட இடங்களை ஒட்டியிருக்கும் சில குடியிருப்புக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், மாவட்ட நிர்வாகம் இறுதி முடிவு எடுக்காமல் நிலுவையில் வைத்துள்ளது.
மேலும், ஆக்கிரமிப்பு குடியிருப்புக்களில் வசித்து வருபவர்களில் பெரும்பாலோர் 1971 முதல் அங்கு குடியிருந்து வருகின்றனர். குடும்ப அட்டை, மின்சார இணைப்பு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவையும் அந்த முகவரியிலேயே வழங்கப்பட்டுள்ளன. மேலும், நகராட்சி மூலம் தெருவிளக்கு, குடிநீர் வசதி செய்யப்பட்டு, 38 ஆண்டு காலம் சகல வசதிகளுடன் குடியிருக்க அரசே அனுமதி தந்திருக்கும் வேளையில், உடனடியாக அவர்களைக் காலி செய்யச் சொல்வது எந்த வகையிலும் நியாயம் இல்லை.
மேலும், இங்கு சுமார் 250 குடும்பங்கள் குடிசைகளில் வசித்து வருகின்றனர். தினக்கூலி பணியில் உள்ள இவர்களை அப்புறப்படுத்தும் முன், அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டியது அரசின் கடமை. உச்சநீதிமன்றம் கூட இதை வலியுறுத்தியுள்ளது.
எனவே, அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
கண்ணீருடன் முறையிட்ட குடிசைப் பெண்கள்:
பாப்பான்கால்வாய் ஆக்கிரமிப்புப் பகுதி குடிசைகளில் வசித்து வரும் பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், புதன்கிழமை பீட்டர்அல்போன்ஸ் எம்.எல்.ஏ. வைச் சந்தித்து, மாற்று ஏற்பாடுகள் செய்து தருமாறு,கண்ணீர் ததும்ப கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறி எம்.எல்.ஏ. சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.
அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை?
38 ஆண்டுகளாக, பாப்பான் கால்வாய்ப் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ள நிலையில், இத்தனை ஆண்டுகளாக அவர்களை அங்கு தங்குவதற்கு அனுமதி அளித்து, அத்தனை வசதிகளையும் ஏற்படுத்தித் தந்துள்ள அதிகாரிகளின் மீது மாவட்ட நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது என்பதை விளக்க வேண்டும். மேலும், இப் பிரச்னை தொடர்பாக தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரைச் சந்தித்துப் பேசவுள்ளேன் என்றார், பீட்டர் அல்போன்ஸ்.