தினமலர் 12.04.2010
கடை நடத்த காலியிடத்தை வாடகைக்கு விடும் நகராட்சி : இடநெருக்கடியான பஸ் ஸ்டாண்டில் விபத்து அபாயம்
சிவகாசி : சிவகாசி பஸ் ஸ்டாண்டில் காலி இடங் களை வாடகைக்கு விடுவதால் பயணிகளுக்கு இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது.சிவகாசி பஸ் ஸ்டாண்டிற்கு தினமும் 110 அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்து செல் கின்றன. இது தவிர மினி பஸ்களும் அடிக்கடி வந்து செல்கின்றன. தினமும் பல நூறு பயணிகள் வந்து செல்லும் சிவகாசி பஸ் ஸ்டாண்டில் பயணிகள் நிற்பதற்கு கூட, இடவசதி போதுமானதாக இல்லை. பயணிகள் பஸ்சை விட்டு இறங்கினாலே அடுத்தடுத்து நிற்கும் பஸ்கள் நடுவே புகுந்துதான் வெளியேற வேண்டி உள்ளது. மேலும் பஸ் ஸ்டாண்டிற்குள் கடைகள் நடத்துபவர்கள் கடை முன் ஸ்டால்கள் வைத்து ஆக்கிரமித்துள்ளனர். இதனால் பயணிகள் ஒதுங்க கூட இடமில்லாமல் அவதிப்படுகின்றனர்.
பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள தனியார் இடத்தை கையகப்படுத்துவதில்,கோர்ட் வழக்கு நிலுவையில் உள்ளதால், பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் முடங்கியுள்ளது. இடநெருக்கடியில் செயல்படும் பஸ் ஸ்டாண்டிற்குள், நகராட்சி நிர்வாகம் பயணிகள் வசதி பற்றி சிந்சிக்காமல் கொஞ்ச நஞ்சம் உள்ள காலி இடத்தையும் தரை வாடகைக்கு விட்டு வருகிறது. பஸ் ஸ்டாண்டிலிருந்து இரண்டு நிமிடத்திற்கு பஸ் வெளியேறும் இடமான தெற்கு நுழைவு வாயில் அருகே காலியிடத்தை வாடகைக்கு விட்டு உள்ளனர். வாடகைக்கு எடுத்தவர்கள் நகராட்சியால் முன் தரமாக போடப்பட்ட கான்கிரிட் தளத்தை ‘டிரில்லர்‘ வைத்து உடைத்து கடை கட்டும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். நுழைவு வாயில் அருகே கடை அமைத்தால் பயணிகளுக்கும், பஸ்களுக்கும் பெரும் நெருக்கடி ஏற்படுவதோடு விபத்து அபாயமும் உள்ளது.
வருமானத்தில் முதல் தர நகராட்சியாக விளங்கும் சிவகாசி நகராட்சிக்கு பஸ் ஸ்டாண்டில் பயணிகள் ஒதுங்கி நிற்பதற்காக உள்ள சிறிய காலிஇடத்தை ரூ. 1400க்கு வாடகைக்கு விட்டுத்தான் நிர்வாகத்தை சமாளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால் என்ன காரணமோ பஸ் ஸ்டாண்டிற்குள் கடை வாடகைக்கு விடுவதில் நகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.