தினமலர் 18.08.2010
கட்சி பாகுபாடின்றி வளர்ச்சிப்பணிகள்:மேயர் பதில்
மதுரை:மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல மக்கள் குறை தீர் கூட்டம், மேயர் தேன்மொழி தலைமையில் நடந்தது. துணை மேயர் மன்னன், துணை கமிஷனர் தர்ப்பகராஜ் முன்னிலை வகித்தனர். பாதாள சாக்கடை, தெரு விளக்கு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் கேட்டு, பொதுமக்கள் மனு கொடுத்தனர். இவற்றின் மீது நடவடிக்கை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.
அப்போது மேயரிடம் 71வது வார்டு, அ.தி.மு.க., உறுப்பினர் ராஜபாண்டி, “”எதிர்கட்சி வார்டுகளில் வளர்ச்சி பணிகள் நடப்பதில்லை. வேண்டுமென்றே புறக்கணிக்கிறீர்கள்‘” என்றார். இதற்கு பதில் அளித்த மேயர் மற்றும் துணை மேயர், “அனைத்து வார்டுகளையும் சமமாகத் தான் நடத்துகிறோம். வளர்ச்சி பணிகளில் கட்சி பாகுபாடு கிடையாது,” என்றனர்.
இதில் சமாதானம் அடையாத ராஜபாண்டி, தொடர்ந்து புகார் கூறியபடி இருந்தார். முன்னதாக, பெத்தானியாபுரத்தில் சாக்கடை தேங்கிய இடங்கள், வைகை கரையோரம் கொட்டப்டும் குப்பை ஆகியவற்றை மேயர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கூட்டத்தில், தலைமை பொறியாளர் சக்திவேல், உதவி கமிஷனர் ரவீந்திரன், மண்டல தலைவர் நாகராஜன், கவுன்சிலர் சிலுவை, நிர்வாக பொறியாளர் சேதுராமலிங்கம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.