தினமலர் 26.04.2010
கட்டணத்தை குறைக்க ஆட்டிறைச்சி விற்பனையாளர்கள் முறையீடு
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி ஆடுவதைக்கூடத்தில் வசூலிக் கப்படும் கட்டணத்தை குறைக்கக் கோரி, ஆட்டிறைச்சி விற்பனை யாளர்கள் சங்கம் சார்பில், கலெக்டரிடம் மனு கொடுக்கப் பட்டுள்ளது. பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் சமயமூர்த்தி தலைமையில் நேற்று நடந்தது. ஆட்டிறைச்சி விற்பனையாளர் கள் சங்கம் சார்பில் கொடுக்கப் பட்ட மனு: ஆட்டிறைச்சிக் கடையை நம்பி 300க்கும் மேற் பட்ட குடும்பத்தினர் வாழ் கிறோம். சென்றாண்டு வரை ஒவ் வொரு இறைச்சிக் கடையிலும் வாரம் 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை மட்டுமே வசூல் செய்யப்பட்டு வந்தது. ஆனால், திடீரென முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல், குத்தகைதாரர் ஆடு ஒன்றுக்கு 50 ரூபாய் செலுத்த வேண்டும் என, நிர்ணயித் துள்ளனர். இதுவரை ஆடு ஒன்றுக்கு ஐந்து ரூபாய் மட்டுமே செலுத்தி வந்தோம். எங்களுடைய இல்லத்தி லேயே சுகாதார முறைப்படி, பொதுமக்களுக்கும், மாநகராட் சிக்கும் எவ்வித இடையூறும் இன்றி ஆடுவதை செய்து, இறைச்சி விற்பனை செய்து வந் தோம். குத்தகை எடுத்தவர்கள், எங்களிடம் கடுமையாக நடந்து கொள்கின்றனர். கோவை, ஈரோடு மாநகராட்சிகளில் ஆடு வதைக் கட்டணம் ஐந்து ரூபாய் முதல் 10 ரூபாய் வரை மட்டுமே வசூலிக்கின்றனர். திருப்பூரில் அதிக கட்டணம் நிர்ணயித்து கட்டாயப்படுத்து கின்றனர். கொடுக்காவிட்டால், இறைச்சியை பறிமுதல் செய்து லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என மிரட்டுகின்றனர். ஆடுவதைக் கூடத்தில் ஒரே நேரத்தில் 30 முதல் 40 ஆடுகள் வரை மட்டுமே வதை செய்ய முடியும். 300 கடைகள் உள்ளன. ஞாயிற்றுக்கிழமையில் ஒரு கடைக்கு 10 ஆடுகள் வரை அறுக்கப்படும். போதிய அளவு ஆடுவதைக் கூடம் இல்லை. 15 கி.மீ., தூரம் ஆடுவதைக்கூடம் வந்து, திரும்பிச் சென்று வியாபாரம் செய்ய இயலாது. இறைச்சியின் தன்மை மாறி விடும்.எனவே, கூடுதலாக எட்டு ஆடுவதைக்கூடங்கள் ஆங் காங்கே அமைக்க வேண்டும். ஐந்து ஏக்கர் பரப்பில் அமைந் துள்ள கோவை ஆடுவதைக் கூடம் 2.62 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் 11 லட்சம் ரூபாய் ஏலம் என்கின்றனர். உழவர் சந்தை அருகில் அமைந்துள்ள தால் காலையில் விவசாயி களுக்கும் இடையூறு ஏற்படும். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலம்பாளையம் நகராட்சி 21வது வார்டு கவுன்சிலர் சுப்ரமணியம் கொடுத்த மனு: நகராட்சி 21வது வார்டுக்கு உட்பட்ட திலகர் நகர் பகுதியில் 45 குழந்தைகளுடன் எஸ்.எஸ்.ஏ., துவக்கப்பள்ளி, கடந்த 2002ல் துவக்கப்பட்டது. தற்போது 120 குழந்தைகள் பயில்கின்றனர்; மூன்று ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். திலகர் நகர் பகுதியில் உள்ள ஒன்றிய துவக்கப்பள்ளி, தண்ணீர் பந்தல் துவக்கப்பள்ளி என்ற பெயருடன் இயங்கி வருகிறது. பள்ளியின் பெயரை திலகர் நகர் எஸ்.எஸ்.ஏ., பள்ளி என பெயர் மாற்றம் செய்ய வேண்டும். கூடுதலாக ஒரு ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும். பள்ளிக்கு தொடர்பில்லாத நபர் கள் விடுமுறை நாட்களில் புகுந்து விடுகின்றனர். இதைத் தடுக்க, சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குன்னத்தூர் வெள்ளிரவெளி பகுதி மக்கள் கொடுத்த மனு: வெள்ளிரவெளி கிராமம் கல்லா குளம் பாறைபுறம்போக்கில் 20 ஆண்டுகளுக்கு மேலாக 50 குடும் பத்தினர் வசித்து வருகிறோம். இலவச வீட்டுமனைப் பட்டா கோரி விண்ணப்பித்தோம். ஆனால், ஊராட்சி தலைவர் தலையீட்டால் பட்டா வழங்கு வது நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, ரேஷன் கார்டை திரும்பக் கொடுக்கும் போராட்டத்தை அறிவித்தோம். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு மாதத்துக்குள் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தது. ஆனால், இதுவரை பட்டா வழங்கப் படவில்லை. வீட்டுமனைப்பட்டா இல்லாததால், மின் இணைப்பு பெற முடியவில்லை. இதனால், அரசு வழங்கிய இலவச கலர் ‘டிவி‘ பயன்படுத்த முடியாமல் உள்ளது. எனவே, உடனடியாக அந்த இடத்துக்கு பட்டா வழங்க வேண்டும். இல்லாவிட்டால் வரும் மே 3ம் தேதி இலவச ‘டிவி‘, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகிய வற்றை திரும்பிக் கொடுக்கும் போராட்டம் நடத்துவோம். மே 10ம் தேதி கலெக்டர் அலுவலகம் முன் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இவ்வாறு, அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.