தினமலர் 15.05.2010
கட்டண கழிப்பிடத்தில் அதிக தொகை குத்தகைதாரருக்கு அபராதம்
கோவை : சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்டிலுள்ள மாநகராட்சி கட்டண கழிப்பிடத்தில் அதிக கட்டணம் வசூலித்ததால் குத்தகைதாரருக்கு 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்டிலுள்ள கட்டண கழிப்பிடத்தில் சிறுநீர் கழிக்க ஒரு ரூபாயும், மலம் கழிக்க 2 ரூபாயும் வசூலிக்க வேண்டும் என்பது மாநகராட்சி விதிமுறை.இதை மீறிய குத்தகை தாரர் ரஹமத்துல்லா, சிறுநீர் கழிக்க மூன்று ரூபாயும், மலம் கழிக்க ஐந்து ரூபாயும் வசூலித்து வந்தார். இது குறித்து மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ராவிற்கு தகவல் வந்தது.நேரில் சென்ற உதவி கமிஷனர் லோகநாதன், நிர்வாக அலுவலர் துரைராஜ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். மாநகராட்சி விதிமுறைப்படி நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கும் அதிகமான தொகை வசூலித்தது தெரியவந்தது. இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா குத்தகைதாரர் ரஹமத்துல்லாவிற்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். ‘இனி வரும் காலத்தில், இது போன்ற நடவடிக்கை தொடர்ந்தால் குத்தகை உரிமம் ரத்து செய்யப்படும்‘ என எச்சரிக்கை விடுத்துள்ளார்.