கட்டி முடித்து ஓராண்டாக திறக்கப்படாத சமுதாயக் கூடம்
நாரவாரிகுப்பம் பேரூராட்சியில் கட்டப்பட்டு திறக்கப்படாத சமுதாயக் கூடம்.
நாரவாரிக்குப்பம் பேரூராட்சியில் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டாகத் திறக்கப்படாமல் உள்ள சமுதாயக் கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் நாரவாரிகுப்பம் பேரூராட்சி சார்பில் பஸ் நிலையம் பின்புறம் அம்பேத்கர் தெருவில் அண்ணா மறுமலர்ச்சித் திட்ட நிதி ரூ.20 லட்சம், பொதுநிதி ரூ.6 லட்சம் என மொத்தம் ரூ.26 லட்சம் செலவில் ஏழைகளின் வீட்டு சுப நிகழ்ச்சிகளுக்கு பயன்படும் வகையில் சமுதாயக் கூடம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் கட்டி முடித்து ஓராண்டாகியும் சமுதாயக் கூட கட்டடம் திறக்கப்படவில்லை.
இதனால் சமுதாயக் கூடம் சமூக விரோத கூடமாக மாறும் நிலை உள்ளது. இதனை உடனடியாகத் திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர் சரவணன், வியாபாரிகள் சங்கத் தலைவர் கே.ஆர்.லோகநாதன் ஆகியோர் கோரிக்கை விடுத்த்துள்ளனர்.