தினமணி 26.07.2012
கட்டுரைகள்: உள்ளாட்சியிலும் நல்லாட்சி தேவை
நம் நாட்டின் முதுகெலும்பாக இருப்பது கிராமங்களே. அவற்றில்தான் நாட்டின் ஜீவன் வாழ்கிறது. ஆகவே கிராமங்களின் முன்னேற்றமே நாட்டின் உண்மையான முன்னேற்றம்” என்றார் அண்ணல் காந்தியடிகள். அத்தகைய கிராமங்களை மையமாக வைத்தே கிராம சுயராஜ்யத்தையும் அவர் வலியுறுத்தினார்.
இதனடிப்படையிலே நமது அரசியல் தலைவர்களும் பஞ்சாயத்து ராஜ் உள்ளிட்ட சட்டங்களை இயற்றி நாட்டின் முன்னேற்றத்துக்கு திட்டங்களையும் தீட்டினர். நாட்டின் சுதந்திரத்தை ஒவ்வொரு மனிதரும் அனுபவிக்கும் வகையிலே குடியாட்சித் தத்துவத்தை நிலைநாட்டும் நோக்கில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறுகின்றன. தமிழகத்தில் 10 மாநகராட்சிகள், 125 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 31 மாவட்ட ஊராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 12,524 ஊராட்சிகள் என வருவாய்க்கு ஏற்ப உள்ளாட்சித் துறை பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கான தலைவர்கள், உறுப்பினர்கள் அனைவரும் அந்தந்தப் பகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
இதில் மாநகராட்சியில் 815 உறுப்பினர்களும், நகராட்சியில் 3,697 உறுப்பினர்களும், பேரூராட்சிகளில் 8,303 உறுப்பினர்களும், மாவட்ட ஊராட்சி மன்றங்களில் 655 உறுப்பினர்களும், ஊராட்சி ஒன்றியக்குழுவில் 6,470 உறுப்பினர்களும் உள்ளனர். ஊராட்சிகளில் 99 ஆயிரத்து 333 உறுப்பினர்களும் உள்ளனர். இந்த அமைப்புகளில் மேயர், தலைவர் ஆகியோர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவர்களுக்குக் கீழே அந்தந்த அமைப்புகளின் அன்றாட பணிகளைச் செயல்படுத்திட ஆயிரக்கணக்கான பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநகர் முதல் சிற்றூர் வரையில் மக்களே தங்களுக்கான தேவைகளை தங்களது பிரதிநிதிகள் மூலம் நேரடியாக நிறைவேற்றிக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி அந்தந்த அமைப்புகளுக்கு ஆண்டுக்கு இவ்வளவு நிதி என மத்திய, மாநில அரசுகளால் ஒதுக்கித் தரப்படுகிறது. அந்தந்த சட்டப்பேரவை உறுப்பினர், மக்களவை உறுப்பினர், மாநிலங்களவை உறுப்பினர் என கூடுதல் நிதிகளும் தொகுதித் திட்டங்களுக்கு செலவிடும் வகையில் சட்டங்கள் உள்ளன.
நிர்வாக ரீதியில் பார்த்தோமானால், நமது கிராமங்கள்முதல் நகர்கள்வரை அனைத்து இடங்களிலும் அடிப்படைத் தேவைகள் உள்ளிட்ட மக்களுக்கான வசதிகளைப் பூர்த்தி செய்யும் வகையிலேயே அரசு நிதிகள் அளிக்கப்பட்டுவருகின்றன. ஆனால் சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளாகியும் நமது கிராம, நகர்ப்புற அடிப்படைத் தேவைகள் நிறைவேறியுள்ளனவா எனக் கேட்டால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.
பல்லாங்குழிச் சாலைகளும், பாதுகாப்பற்ற குடிநீரும், வெட்டப்படாத முள்செடிகளும் அகற்றப்படாத குப்பைகளும் ஈ, கொசுத் தொல்லையும் தொடர்கின்றன. இதனால் மலேரியா, டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய்கள் பரவி, அப்பாவிக் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை பலியாகி வருவது வாடிக்கையாகிறது.
இதற்கெல்லாம் யார் பொறுப்பு? ஆளுங்கட்சியாக இருப்பவர்கள் என்று உடனடியாகக் கூறிவிடலாம். அது சரியல்ல.
ஆளும் கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் செயல்படுவது அந்தந்தப் பகுதி மக்களும், அவர்களது பிரதிநிதிகளும்தான். ஆனால், அவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அவர்களது பேச்சும், செயலும் அமைகிறது. உண்மையாக தமது பகுதிகள் மீதும், தமது உறவினர்கள் மீதும் அக்கறையுடன் ஊராட்சிப் பிரதிநிதிகள் செயல்படுவார்களேயானால், பகுதி மேம்பாட்டுக்கான நிதியை அவர்கள் முழுமையாக அல்லவா செலவிட்டிருப்பார்கள்? அப்படிச் செலவிடப்பட்டிருந்தால் நமது அடிப்படைத் தேவைகள் இந்நேரம் தீர்க்கப்பட்டிருக்குமே?
முன்பெல்லாம் உள்ளாட்சிப் பொறுப்புக்கு வந்தவர் அந்தந்த பகுதியில் செயல்படுத்திய திட்டங்களை வைத்து அவரைப் பாராட்டுவதும், புகழ்வதும் பெருமையாகக் கருதப்பட்டது. ஆனால், இப்போது பொறுப்பில் இருந்தவர் எந்த அளவுக்குச் சம்பாதித்தார் என்பதையே பெருமையாகப் பேசுவதும், அப்படி சம்பாதிக்கும் போக்கை சாமர்த்தியமாகக் கருதுவதும் அதிகரித்துவிட்டது.
மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் சமீபத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் ஆண்டுத் தணிக்கை ஆய்வு நடைபெற்றுள்ளது. அதில் பெரும்பாலான ஊராட்சிகளில் பொய்க் கணக்கெழுதி நிதியை அபகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் மட்டும் சுமார் 40 ஊராட்சிகளில் நிதி முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டு, அந்தந்த ஊராட்சித் தலைவர்கள் மற்றும் எழுத்தர் எனப்படும் செயலர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
கட்டாத கட்டடங்கள், வெட்டாத குளங்கள், பராமரிக்கப்படாத நீர்நிலைகள், சீர்படுத்தப்படாத சுகாதாரம் என நிதிமுறைகேடு பலவழிகளில் நடந்துள்ளது. பள்ளி, கழிப்பறைகள் ஆகிய கட்டடங்களைக் கட்டுவதற்கான நிதியையும், குப்பைகளை அகற்றி, கழிவுநீரை வெளியேற்றி சுகாதாரத்தை மேம்படுத்தும் நிதிகளிலுமே பெரும்பாலான ஊராட்சித் தலைவர்கள் முறைகேடு செய்துள்ளனர்.
தென் மாவட்டங்களில் சமீபகாலமாக டெங்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு அதில் ஏராளமானோர் உயிரிழந்திருப்பது வருந்தத்தக்கது. அதைவிட வருத்தத்துக்குரியது எதுவென்றால், சுகாதாரத்தை சீர்படுத்த செலவிடவேண்டிய நிதியை அபகரித்திருக்கும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளது செயல்பாடுகள்தான். நாட்டின் உயர்ந்த பதவியில் இருப்போரின் ஊழல்களை வெளிச்சமிடும் ஊடகங்கள், நாட்டின் அடிமட்ட வேர்களாக விளங்கும் உள்ளாட்சியில் நடைபெறும் முறைகேடுகளை அவ்வளவாகக் கண்டுகொள்வதில்லை. இதனால் உள்ளாட்சிகளில் ஊழல் செய்வோர் சமூகத்தின் பார்வையில் படாமல் தப்பியும் வருகின்றனர்.
இந்நிலை மாறினாலே நமது எதிர்காலச் சந்ததியினர் ஓரளவாவது சுகாதாரக்காற்றை சுவாசிக்க முடியும்.