தினமலர் 16.08.2010
கணியூரில் கட்டுமான பணி முடிந்த கட்டடங்கள்
மடத்துக்குளம்: கணியூர் பேரூராட்சியில், கட்டுமான பணிகள் முடிந்த கட்டடங்கள் பல ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் உள்ளதால், பல லட்சம் ரூபாய் அரசு நிதி வீணாகி வருகிறது. மடத்துக்குளம் அருகே உள்ள கணியூர் பேரூராட்சியில் மக்கள் பயன்பாட்டுக்காக கட்டப்பட்ட பல அரசு கட்டடங்கள், மேல்நிலைத் தொட்டிகள், கழிப்பிடங்கள், வணிக வளாகங்கள், கட்டுமானப்பணிகள் முடிந்து பல ஆண்டுகள் ஆன பின்னும் திறக்கப்படாமல் உள்ளன.
மாரியம்மன் கோவில் அருகில் ரேஷன்கடை : மதிநகர் உட்பட கணியூரின் கிழக்கு பகுதிகளில் வசித்து வரும் மக்கள், தற்போது பஸ் ஸ்டாண்டுக்கு அருகில் உள்ள ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கி வருகின்றனர். இரண்டு கி.மீ., தூரம் நடந்து சென்று திரும்ப வேண்டியதுள்ளதால், பொது மக்கள் சிரமத்தை குறைக்கும் வகையில், நமக்கு நாமே திட்டத்தின் 2 லட்சம் ரூபாய் மதிப்பில் மாரியம்மன் கோவில் அருகில் ரேஷன் கடை கட்டப்பட்டது. கட்டி 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த கட்டடம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவில்லை.”வாம்பே ‘ மகளிர் சுகாதார வளாகம்: வெங்கிடகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி ரோடு மற்றும் வாய்க்கால் பகுதிகளை பொதுமக்கள் திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்கள் கடும் துர்நாற்றத்துடன் படிக்க வேண்டிய அவல நிலை உள்ளது. இந்த நிலையை போக்க, இப்பகுதியில் 5 லட்சம் ரூபாய் செலவில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. கட்டி, மூன்று ஆண்டுகளாகியும் மக்கள் பயன்பாட்டிற்கு சுகாதார வளாகம் திறக்கப்படாமல், திறந்த வெளி கழிப்பிடம் என்ற அவல நிலை கணியூர் பேரூராட்சியில் தொடர்கிறது. சமுதாய நலக்கூடம்: கணியூர் பேரூராட்சி மக்கள் பயன்பெறும் வகையில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 11 லட்சம் ரூபாய் செலவில், மாரியம்மன் கோவிலுக்கு அருகில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது. கட்டுமானப்பணிகள் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும், இதுவும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை.
சுகாதார கழிப்பிடம்: கணியூர் பேரூராட்சியில் வடகிழக்கு பகுதியில் வசிக்கும் பல ஆயிரக்கணக்கான மக்கள் பயன்பெறும் வகையில், மயானப் பகுதியில் தாராபுரம் எம்.எல்.ஏ.,தொகுதி வளர்ச்சி நிதியின் கீழ், சுகாதார கழிப்பிடம் கட்டப்பட்டது. கட்டி, இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் திறக்கப்படாமல் உள்ளதால், இப்பகுதி மக்கள் திறந்த வெளிகளையே கழிப்பிடங்களாக பயன்படுத்தி வருகின்றனர். மேல் நிலைத்தொட்டி: மதிநகர் பகுதியில் வசிக்கும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு தொடர்கதையாக உள்ளது. இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், மதிநகரில் 2 லட்சம் ரூபாய் செலவில் மேல் நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டது. கட்டி, 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை குடிநீர் தொட்டி பயன்படுத்தப்படாமல் வீணாக வைக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீருக்காக பல கிலோ மீட்டர் அலைய வேண்டிய அவல நிலை தொடர்கிறது. இது குறித்து செயல் அலுவலர் தாஜ்நிஷா கூறியதாவது:-செயல் அலுவலராக கூடுதல் பொறுப்பேற்று சில வாரங்கள் தான் ஆகிறது. 14 ஆண்டுகளாக வீணாக உள்ள தாட்கோ வணிக வளாகம் குறித்து மேல் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பி, ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அது போல், மக்கள் பயன்பாட்டிற்கு இல்லாத கட்டடங்களையும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்றார்.மக்கள் பயன்பாட்டுக்காக கட்டப்பட்டு, வீணாக வைக்கப்பட்டுள்ளதால் கட்டடங்கள் அனைத்தும் வீணாகி வருகிறது. மக்களுக்காக ஒதுக்கப்பட்ட பல லட்சம் ரூபாய் அரசு நிதி கணியூர் பேரூராட்சியில் வீணடிக்கப்பட்டுள்ளது.