தினமலர் 15.12.2010
கனமழையில் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்க முடிவு
தாம்பரம் : வெள்ளத்தால் சீர்குலைந்த, சென்னை மாநகர நெடுஞ்சாலைத்துறை கோட்டத்திற்குட்பட்ட சாலைகளை 73 கோடி ரூபாய் செலவில், சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.சமீபத்தில் பெய்த கனமழையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் வெள்ளம் தேங்கியது.
ஜி.எஸ்.டி., தாம்பரம் – வேளச்சேரி, மவுன்ட் – மடிப்பாக்கம், திருநீர்மலை – திருமுடிவாக்கம், தாம்பரம் – திருநீர்மலை, மேட வாக்கம் – சோழிங்கநல்லூர், பல்லாவரம் – அனகாபுத்தூர், சென்னை பை–பாஸ் சாலையின் சர்வீஸ் சாலை போன்ற முக்கிய சாலைகளும், உள்ளாட்சி அமைப்பு களின் கட்டுப்பாட்டில் உள்ள, சாலைகளும் மழையால் சீர்குலைந்தன.
மழை விட்டு பல நாட்கள் கடந்தும், இந்த சாலைகள் சீரமைக்கப்படவில்லை. இந்நிலையில், ஒவ்வொரு மாவட்டத் திலும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சாலைகளை, நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் ஒருவர் நேரிடையாக ஆய்வு செய்து வருகிறார்.அந்த சாலைகளை சீரமைக்க, தேவையான அறிக்கையை மாவட்ட நிர்வாகம் மூலம் அரசின் அனுமதி பெறுவதற்காக அனுப்பப்பட்டு வருகிறது.அந்த வகையில் சென்னையில், கிண்டி கத்திப்பாராவில் இருந்து கோயம்பேடு செல்லும் 100 அடி சாலையில் 9 கிலோ மீட்டர்; தாம்பரம் – வேளச்சேரி சாலையில் சைதாப்பேட்டை முதல் தாம்பரம் வரை; மவுன்ட் – மடிப்பாக்கம் சாலை; மேடவாக்கம் – சோழிங்கநல்லூர் சாலை; வால் டாக்கஸ் சாலை வழியாக செல்லும் என்எச் 5 சாலை; திருநீர்மலை – திருமுடிவாக்கம் சாலை உள்ளிட்ட 18 சாலைகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளது தெரிந்தது.இதையடுத்து, இந்த சாலைகளை 72 கோடி ரூபாய் செலவில், சீரமைக்க அரசின் அனுமதி பெறுவதற்காக அறிக்கை அனுப்பப் பட்டுள்ளது. அரசிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன் டெண்டர் கோரப்பட்டு பணிகள் துவக்கப்படும்.காஞ்சிபுரத்திற்கு ரூ.1.80 கோடி: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட ஐந்து உள்ளாட்சிகளுக்கு ஒரு கோடியே 80 லட்சம் ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது.ஆலந்தூரில் 40 லட்சம், மறைமலை நகரில் 55 லட்சம், காஞ்சிபுரத்தில் 20 லட்சம், தாம்பரத்தில் 50 லட்சம்; பம்மல் 15 லட்சம் என ஐந்து உள்ளாட்சிகளுக்கு ஒரு கோடியே 80 லட்சம் ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது.
திருமங்கலத்தில் ரூ.62 கோடியில் மேம்பாலம்:
திருமங்கலம் சிக்னல் அருகே, ஏற்படும் நெரிசலை தவிர்க்க, அங்கு மேம்பாலம் கட்ட வேண்டும், என நீண்ட நாட்களாக கோரிக்கை எழுந்தது.இதையடுத்து, சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் கீழ் அங்கு மேம்பாலம் கட்ட கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது.ஆனால், மேம்பாலம் அமையும் இடத்தில் மெட்ரோ ரயில் தடம் செல்வதால் அதை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.இந்நிலையில், திருத்திய மதிப்பீடு 62 கோடி ரூபாய்செலவில் மேம்பாலம் அமைக்க டெண்டர் கோரப்பட்டு, “ஒர்க் ஆர்டரும்‘ கொடுக்கப்பட்டுள்ளது.