தினமணி 25.06.2013
தினமணி 25.06.2013
கனாட் பிளேஸ் மறுமேம்பாட்டு பணிகள் இந்த வாரத்தில் முடியும்
கனாட் பிளேஸ் பகுதி மறுமேம்பாட்டுத் திட்டப் பணிகள்
அனைத்தும் இந்த வாரத்திற்குள் முடிக்கப்படும்’ என்று புது தில்லி
முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) அதிகாரிகள் தெரிவித்தனர்.
கனாட் பிளேஸ் பகுதியை அதன் பழைமை மாறாமல் புதுப்பிக்கும் வகையில், அங்கு
குடிநீர், மின்சாரம், தொலைத்தொடர்பு உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை
தரைக்கடியில்
குழாய்கள் மூலம் ஏற்படுத்தும் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒராண்டு காலமாக பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகளை மேற்கொள்ளும்
கன்சல்டன்ட் நிறுவனமான “என்ஜினீயரிங் இந்தியா லிமிடெட்’ (இ.ஐ.எல்.) அதிகாரி
ஒருவர் கூறியதாவது:
முக்கியமான பணிகள் அனைத்தும் இந்த வார இறுதிக்குள்ளும், தண்ணீர், மின்சாரம் தொடர்பான பணிகள் அடுத்த வாரத்திலும் முடிவுறும்.
சுரங்கப் பாதையில் அடிப்படை கட்டுமானப் பணிகளை முடித்துவிட்டோம். எஸ்கலேட்டர்கள் நிறுவும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
கனாட் பிளேஸ் பகுதியில் கடைகளுக்கு தரைக்கடியில் இருந்து மின்சாரம் அளிக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளோம்.
மொத்தம் உள்ள 20 மின் மாற்றிகளில் 13 மின் மாற்றிகளுக்கு மின்சாரம்
வழங்குவதற்கு அனுமதி பெற்றுள்ளோம். இவற்றில் 8 மின் மாற்றிகள்
செயல்பாட்டில் உள்ளன.
எஞ்சியுள்ள மின்மாற்றிகள் அடுத்த வாரத்திற்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று அந்த அதிகாரி கூறினார்.
இது குறித்து, என்.டி.எம்.சி. அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தரைக்கடியில் மின்சாரம் கொண்டு செல்வதற்கு கேபிள்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. சில தினங்களில் இப்பணிகள் முடிவுறும்.
இப்பணிக்காக மின்சாரத்தை முழுவதும் நிறுத்த முடியவில்லை. அதனால் பணிகளில் சற்றுத் தாமதம் ஏற்படுகிறது.
மறுமேம்பாட்டுத் திட்டம் காரணமாக கனாட் பிளேஸ் பகுதியில் நேர்த்தியான
வாகன நிறுத்துமிடங்கள், சாலைகளில் தரமிக்க மின் விளக்குகள், சீரான
வெள்ளைநிற வர்ணப்பூச்சு, உரிய தகவல்கள் பலகைகள், புதிய தளம் உள்பட பல்வேறு
மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதி புதுப்பொலிவு பெற்றுள்ளது என்று
அவர் கூறினார்.
புது தில்லி வர்த்தகர்கள் சங்கத் தலைவர் அதுல் பார்கவா கூறியதாவது:
மறுமேம்பாடு பணி காரணமாக கனாட் பிளேஸ் புதுப்பொலிவு பெற்றுத்
திகழ்கிறது. இதனால், இங்கு வருவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று
எதிர்பார்க்கிறோம்.
மின்கம்பிகள் பதிக்கும் பணியும், முட்டுத் தூண்கள் பதிக்கும் பணியும்
செப்டம்பர் மாதத்திற்கு முன்பாக முடிக்கப்பட்டுவிடும் என்று நம்புகிறோம்
என்று அதுல் பார்கவா கூறினார்.