தினமலர் 12.04.2010
கமிஷனர் பணியிடம் காலி வளர்ச்சிப் பணிகள் பாதிப்பு
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சியில் கமிஷனர் பதவி காலியாக உள்ளதால் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.நெல்லிக்குப்பம் நகராட்சியில் பணியாற்றிய கமிஷனர் முத்துக்குமார் ஆறு மாதத்துக்கு முன் வேறு பணிக்கு சென்றார். அவருக்கு பதிலாக பண்ருட்டி நகராட்சி கமிஷனர் உமா மகேஸ்வரி கூடுதலாக நெல்லிக்குப்பம் நகராட்சி கமிஷனர் பொறுப்பையும் கவனித்து வந்தார்.பண்ருட்டி நகராட்சி பணிகளை கவனிக்கவே நேரம் இல்லாத நிலையில் நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வந்து செல்லும் நிலை உள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு நகராட்சியிலும் நகரமன்ற கூட்டம் நடக்கிறது. பண்ருட்டி கூட்டத்தில் மட்டுமே கலந்து கொள்கிறார். நெல்லிக்குப்பம் கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொள்ள முடிவதில்லை. இதுகுறித்து சேர்மன், உயர் அதிகாரிகளிடம் முறையிட்டும் கமிஷனர் நியமிக்கப்படவில்லை. வளர்ச்சிப் பணிகள் பாதிப்பின்றி தொய்வில்லாமல் நடக்க உடனடியாக கமிஷனர் நியமிக்கப்பட வேண்டும்.