தினமலர் 29.11.2010
கமிஷனர் வேண்டுகோள் குடிநீரை நன்கு காய்ச்சி வடிகட்டி குடிக்கணும்
திருச்சி
: “திருச்சி மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்கள் குடிநீரை நன்கு காய்ச்சி வடிகட்டிய பின்னரே பயன்படுத்தவேண்டும்‘ என்று மாநகராட்சி கமிஷனர் பால்சாமி கேட்டுக் கொண்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த ஒருவாரகாலமாக பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக காவிரி ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள திருச்சி மாநகராட்சியின் குடிநீர் ஆதாரப் பகுதிகளில் மழைநீர் கலந்து வர வாய்ப்புள்ளது. ஆகையால், திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குளோரின் கலந்த தண்ணீரை பயன்படுத்துமாறும், தண்ணீரை வெறுமனே காய்ச்சி குடிக்காமல், கொதிக்க காய்ச்சி ஆறவைத்த பின்னரே பயன்படுத்த வேண்டும். மழைநேரங்களில் சாலையோரங்களில் விற்கப்படும் சுகாதாரமற்ற தின்பண்டங்களை வாங்கி சாப்பிட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.