தினமணி 18.06.2010 கம்பத்தில் குடிநீர் இணைப்புக்கான கூடுதல் டெபாசிட் தொகையை திரும்பப் பெற வலியுறுத்தல் கம்பம், ஜூன் 17:கம்பம் நகராட்சியில் குடிநீருக்கான டெபாசிட் தொகை உயர்த்தப்பட்டதை திரும்பப்பெற வேண்டும் என நுகர்வோர் உரிமை மக்கள் பாதுகாப்பு சங்கம் வியாழக்கிழமை வலியுறுத்தியுள்ளது. கம்பத்தில் நுகர்வோர் உரிமை மக்கள் பாதுகாப்பு சங்கக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் வி.ராஜேந்திரன், மாநில தொழிற்சங்கச் செயலாளர் முருகன், மாநிலத் தலைவர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் எம்.வி.தெய்வேந்திரன் தலைமை வகித்தார். கூட்டத்தில், சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளையிலும் தமிழை வழக்காடு மொழியாக மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கக் கோரியும், இதற்காக உண்ணாவிரதம் இருக்கும் வழக்கறிஞர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது என்றும், கம்பம் நகராட்சி குடிநீர் இணைப்புக்கான டெபாசிட் தொகையை உயர்த்தியதை உடனே திரும்பப்பெற வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.