தினமலர் 04.06.2010
கம்பம் புதிய குடிநீர் மேம்பாட்டு திட்டம்: அதிகாரிகள் ஆய்வு
கம்பம்: கம்பம் நகர் குடிநீர் மேம்பாட்டு திட்டம் குறித்து இறுதி முடிவு எடுக்க, நகராட்சிகளின் தலைமை பொறியாளர் ரகுநாதன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டார். கம்பம் நகராட்சயில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க 2004 ல் புதிய திட்டம் ஒன்று ரூ. 4 கோடி மதிப்பில் தயாரிக்கப் பட்டது. இத்திட்டம் பல்வேறு கார ணங்களால் நிறைவேற்ற முடியாமல் போனது. ரூ.4 கோடிக்கு தயாரிக்கப்பட்ட திட்டத்தின் மதிப்பீடு தற்போது 16 கோடியாக உயர்ந்துள்ளது.
திட்டம் நிறைவேற்ற ஏற்ற வாய்ப்புகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய நகராட்சிகளின் தலைமை பொறியாளர் ரகுநாதன், தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிறுவனத்தின் மேலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் கம்பம் வந்தனர். லோயர்கேம்பில் உள்ள குடிநீர் வாரியத்தின் பம்பிங் ஸ்டேஷன், பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படும் வாய்க்கால், போர்பை டேம், ராட்சத பைப்புகள், இரைச்சல் பாலம் உள்ளிட்ட பல பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
இவர்களுடன் குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் முருகேசன், முத்தையா, உதவி செயற்பொறியாளர் தெய்வேந்திரன், நகராட்சி தலைவர் அம்பிகா, கமிஷனர் அய்யப்பன், ஓவர்சீயர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் சென்றனர்.