தினமலர் 07.04.2010
கரிமேடு மீன் மார்க்கெட் விவகாரம் : ஏலதாரருக்கு மாநகராட்சி எச்சரிக்கை : கமிஷனர் செபாஸ்டின் பேட்டி
மதுரை: மதுரை மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கரிமேடு மீன் மார்க்கெட்டில், சைக்கிள்கள் மற்றும் வியாபாரிகளிடம், மாநகராட்சி நிர்ணயித்த கட்டணத்தைத் தான் வசூலிக்க வேண்டும் என ஏலதாரர்களிடம் கூறப்பட்டுள்ளது. இதை மீறினால், ஏலம் ரத்து செய்யப்படும். கட்டண விபரம் பற்றி மாநகராட்சி சார்பில் போர்டு வைக்கப்படும். அங்கு சட்ட விரோத நடவடிக்கைகள் நடந்தால், போலீசில் புகார் செய்யப்படும். மதுரையில் ஒரு முறை தருவதற்கு, 80 எம்.எல்.டி., (மில்லியன் லிட்டர்) குடிநீர் தேவைப்படுகிறது. பெரியாறு மற்றும் வைகை அணை களில் இப்போது உள்ள தண்ணீரை வைத்து 31.5.10 வரை ஒரு நாள் விட்டு ஒருநாள் தண்ணீர் தரலாம். ஜூன் மாதம் பருவமழை பெய்யும் என எதிர்பார்க்கிறோம். அழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் சரிவான பாதை அமைக்கும் பணி நடக்கிறது. அழகர் ஆற்றில் இறங்க, வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வாய்ப்பில்லை. எதிர்சேவை நடக்கும் சாலைகள் சரி செய்யப்படுகின்றன. தெரு விளக்குகள் அமைக்கப்படுகின்றன. பொதுமக்களுக்கு குடிநீர் தர 80 பி.வி.சி., டேங்குகள் வைக்கப் படும். சுகாதார பணிகளுக்காக தற்காலிகமாக 400 பணியாளர்கள் நியமிக்கப்படுவர். மருத்துவ குழுக்கள் அமைக்கப்படும். பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன்களில் தடுப்பூசி மையங்கள் செயல்படும். மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரை குளத்தில் தண்ணீர் நிரப்பும் திட்டம், 45 லட்சம் ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட உள்ளது. இதில் பாதி தொகையை இந்து அறநிலையத் துறை தர ஒப்புக்கொண்டது. ஆனால் தண்ணீரை மணலூரில் இருந்தும் பம்ப் செய்து கொண்டு வர மாநகராட்சிக்கு தொடர்ந்து செலவாகும். இதற்காக ஒவ்வொரு ஒரு லட்சம் லிட்டர் தண்ணீருக்கும் 3500 ரூபாய் கட்டணம் கேட்டிருந்தோம். இதை இலவசமாக வழங்குமாறு கோயில் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இது குறித்து மாநகராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்படும். சென்ட்ரல் மார்க்கெட் இந்த மாதம் முதல் ஏலம் விடப்படவில்லை. மாநகராட்சியே வாடகையை வசூலிக்கிறது. விரைவில் பணிகள் முடிந்து புதிய இடத்தில் மார்க்கெட் செயல்படத் துவங்கும், என்றார். தலைமை பொறியாளர் சக்திவேல், கண்காணிப்பு பொறியாளர் விஜயகுமார், செயற்பொறியாளர் மதுரம், மக்கள் தொடர்பு அலுவலர் ஆர்.பாஸ்கரன் உடன் இருந்தனர்.