தினமணி 20.11.2010
கருமேனி ஆற்றில் குப்பைக் கழிவுகள் கொட்டுவதை தடை செய்ய வலியுறுத்தல்
சாத்தான்குளம், நவ.19: சாத்தான்குளம் கருமேனி ஆற்றில் குப்பைக் கழிவுகளை பேரூராட்சி நிர்வாகம் கொட்டுவதை தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். சாத்தான்குளம் திமுக. நகரச் செயலர் ஏ.எஸ்.ஜோசப் தலைமையில் கல்விக் கழக நிறுவனர் சுப்பிரமணியம், பன்னம்பாறை ஊராட்சித் தலைவர் சந்திரா, திமுக கிளைச் செயலர் செல்வராஜ், இயற்கை யோகா நலவாழ்வு சங்கச் செயலர் ராமகிருஷ்ணன், திமுக ஒன்றிய பொருளாளர் முஸ்தபா உள்ளிட்ட 50-க்கு மேற்பட்ட பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரனிடம் அளித்த மனு:
÷சாத்தான்குளத்தில் உள்ள கருமேனி ஆற்றின் வழியாக மழைக்காலங்களில் வைரவன்தருவை, புத்தன்தருவை குளங்களுக்கு தண்ணீர் செல்கிறது. ÷தற்போது இந்த ஆற்றில் பேரூராட்சி மூலம் சேகரிக்கப்படும் குப்பைகளும், கழிவுகளும் கொட்டப்படுகின்றன. இதனால் ஆறு மேடாகியுள்ளது. குப்பைகளில் உள்ள பிளாஸ்டிக் பொருள்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு வைரவன்தருவை, புத்தன்தருவை குளங்களில் தங்குகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் குளத்தின் அடியில் படிவதால் மழைநீர் நிலத்தடியில் இறங்க வழியில்லை. இதனால் நிலத்தடி நீரின் தன்மை மாறாமல் போய்விடும்.
இது சம்பந்தமாக பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் சுகாதார சீர்கேடும், தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே குப்பைகளை ஆற்றில் கொட்டாமல் பேரூராட்சிக்கென்று தனியாக இடத்தை தேர்வு செய்து அந்த இடத்தில் குப்பைகளை கொட்ட வேண்டும் என்றனர் அவர்கள். ÷இது சம்பந்தமாக பன்னம்பாறை ஊராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை பன்னம்பாறை ஊராட்சித் தலைவர் சந்திரா ஆட்சியரிடம் அளித்தார்.