தினமலர் 30.07.2012
கரூரில் குடிநீர் திட்டப்பணிகள் தமிழக அமைச்சர் நேரில் ஆய்வு
கரூர்: கரூர் அருகே கட்டளை காவிரியாற்றில் நடந்து வரும் குடிநீர் திட்டப்பணிகளை, தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விரிவாக்கம் செய்யப்பட்ட கரூர் நகராட்சியில் உள்ள பழைய இனாம் கரூர் நகராட்சி, பழைய தாந்தோணி நகராட்சி மற்றும் பழைய கரூர் நகராட்சிக்குட்பட்ட பொதுமக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய, முதல்வர் ஜெயலலிதா 68 கோடி ரூபாய் குடிநீர் திட்ட பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.இதையடுத்து நெரூர் அருகில் காவிரி ஆற்றின் கரையோர பகுதியில் நீர் சேகரிக்கும் கிணறு, நடைபாலம் அமைக்கும் பணிகள் மற்றும் 4.70 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர் சேகரிப்பு தொட்டி கட்டும் பணியும், 24 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வருகிறது.
கரூர் நகராட்சி தாந்தோணி நகரப்பகுதிக்குட்பட்ட மக்களின் குடிநீர் பணிகளை பூர்த்தி செய்யும் வகையில், கட்டளை காவிரி கரையோர பகுதியில் நீர் சேமிப்பு கிணறு மற்றும் நடை பாலம் அமைக்கும் பணி மற்றும் மூலக்காட்டனூரில் 4.55 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட தரைமட்ட நீர் சேகரிப்பு தொட்டி கட்டும் பணி, திண்ணப்பா நகரில் 6.40 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிகள் 25 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வருகிறது.நேற்று காலை 11 மணிக்கு கட்டளை காவிரியாற்றில் நடந்து வரும் நீர் சேகரிப்பு பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பார்வையிட்டு, பணிகளை குறிப்பிட்ட காலத்தில் முடிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தர விட்டார். பின்னர் அவர் கூறுகையில், “”கரூர் நகராட்சி பகுதி களுக்குட்பட்ட குடிநீர் திட்டப்பணிகள் வரும் 2013ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலும் முடிவுற்று மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
ஆய்வின் போது கலெக்டர் ÷ஷாபனா, எம்.எல்.ஏ., காமராஜ், கரூர் நகராட்சி தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர் காளியப்பன், நகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன், நகராட்சி கவுன் சிலர்கள் நெடுஞ்செழியன், தானேஷ், மாவட்ட கவுன்சிலர் வேலுச்சாமி, தாந்தோணி நகர அ.தி.மு.க., செயலாளர் சரவணன், தொகுதி கழக இணைச்செயலாளர் விஜயகுமார் உடன் சென்றனர்.