கரூர் நகராட்சி வரி வசூல் தீவிரம்
கரூர் நகராட்சிக்கு வரவேண்டிய நிலுவை கட்டணங்களை வசூலிக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது
கரூர் நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம், சொத்து வரி, நகராட்சி கட்டடங்களுக்கான வாடகை உள்ளிட்டவைகளை வசூல் செய்ய நகராட்சி ஆணையர் எல். கோபாலகிருஷ்ணன் (பொ) தலைமையில் அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக குடிநீர் கட்டண பாக்கி, சொத்து வரி, நகராட்சி கடை வாடகை ஆகியை செலுத்தாதவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. கரூர் காமராஜ் மார்க்கெட், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. நீண்டகாலமாக வாடகை செலுத்தாதவர்களுக்கு நகராட்சி சார்பில் நோட்டிஸ் அனுப்பப்பட்டது. குடிநீர் கட்டணம், சொத்து வரி ஆகியவற்றின் நிலுவை குறித்து சம்மந்தப்பட்டவர்கள் இல்லங்களில் சுவரொட்டி ஒட்டப்பட்டும், தண்டோரா மூலமும் அறிவிக்கப்பட்டது. இருந்தாலும் எதிர்பார்த்த அளவுக்கு வசூலாகவில்லை.
இதையடுத்து நகராட்சி அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டது. குடிநீர் கட்டணம், தொழில் வரி, கடை வாடகை உள்ளிட்டவைகளை நகராட்சிக்கு சம்மந்தப்பட்டவர்கள் செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் போது துண்டிப்பு கட்டணமாக ரூ,750, வரி கட்டியபின் மீண்டும் இணைப்பு பெறுவதற்கு ரூ.750-ம் செலுத்த வேண்டும் என அறிவித்தது.
இந்த எச்சரிக்கையால் இப்போது நகராட்சிக்கு குடிநீர் கட்டணம், இதர வரி கட்டுவோர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, சனிக்கிழமையும் நிலுவையில் உள்ள குடிநீர் கட்டணம், வரி ஆகியவற்றை வசூலிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.