கரூர் மாநகராட்சியாக அறிவிக்கப்படுமா?முதல்வர் நடவடிக்கை எடுப்பார்: நகராட்சி தலைவர் தகவல்
கரூர்: “”கரூரை மாநகராட்சியாக அறிவிக்க முதல்வர் ஜெயலலிதா, உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பார்,” என, நகராட்சி தலைவர் செல்வராஜ் தெரிவித்தார்.கரூர் நகராட்சி சாதாரண கூட்டம், நகராட்சி தலைவர் செல்வராஜ் தலைமையில் நேற்று மாலை 4.45 மணிக்கு துவங்கியது.ஏகாம்பரம் (அ.தி.மு.க.,): எனது வார்டில் பொது நிதியின் கீழ் 11 லட்ச செலவில், பணிகள் துவக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இதுவரை பணிகள் நடக்கவில்லை.நாராயணன் (தி.மு.க.,): எனது வார்டிலும் இதே நிலைதான் உள்ளது. சில காண்ட்ராக்டர்கள் பணிகளை செய்வது இல்லை.தலைவர்: காண்ட்ராக்ட் எடுத்த பிறகு, பணிகளை செய்யாத காண்ட்ராக்டர்கள் மாற்றப்பட்டு, புதியதாக தேர்வு செய்யப்படுவார்கள்.சத்திய மூர்த்தி (ம.தி.மு.க.,): விக்னேஸ்வரர் நகரில், நகராட்சிக்கு சொந்தமான இடம், தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதை நகராட்சி அதிகாரிகள் மீட்க வேண்டும்.முத்துசாமி (அ.தி.மு.க.,): ஆக்கிரமிப்பு செய்தது யார் ? (அப்போது, சத்தியமூர்த்தி ஒரு சில பெயர்களை கூறினார்)ஜெயராஜ் (அ.தி.மு.க.,): ஆக்கிரமிப்பு செய்து விட்டதாக ஆதாரம் இல்லாமல் பேசக்கூடாது. (அப்போது, சத்தியமூர்த்திக்கும், ஜெயராஜூக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது)தலைவர், நகராட்சி இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டிருந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.ஜெயராஜ் (அ.தி.மு.க.,): தாந்தோணி மலை அடுக்குமாடி குடியிருப்பு முன், உள்ள இடங்கள் தி.மு.க.,வினரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதை மீட்டு சமுதாய கூடம் கட்ட வேண்டும்.தலைவர்: நகராட்சி அதிகாரிகள் அந்த இடத்தை உரிய முறையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார்கள்.நாராயணன் (தி.மு.க.,): கடந்த தி.மு.க., ஆட்சியில் நகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகி விட்டது. அதை எப்போது திறந்து பயன்படுத்தப்படும்.தலைவர்: அந்த கட்டிடம் உரிய முறையில் கட்டப்படவில்லை. இதனால், மீண்டும் பணிகள் நடந்து வருகிறது. அடுத்த கூட்டம் புதிய கட்டிடத்தில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.ஸ்டீபன்பாபு (காங்.,): தஞ்சாவூர், திண்டுக்கல் நகராட்சிகள், மாநகராட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் எப்போது மாநகராட்சியாக அறிவிக்கப்படும்.தலைவர்: கரூர் நகராட்சியின் மக்கள் தொகை உள்ளிட்ட நிலைகளை ஆராய்ந்து, உரிய நேரத்தில் கரூரை மாநகராட்சியாக அறிவிக்க முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பார்.இவ்வாறு விவாதம் நடந்தது.கூட்டத்தில், சாதாரணம் மற்றும் அவசர கூட்டத்தில் இடம் பெற்றிருந்த 112 தீர்மானங்களில், ஒரு தீர்மானத்தை தவிர மற்ற 111 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பத்திரிகைகள் மீது எகிறிய தலைவர்கரூர் நகராட்சி பகுதியில் உள்ள குடிநீர் பிரச்னை குறித்து, “காலைக்கதிர்’ உள்ளிட்ட பத்திரிகைளில் செய்தி வெளியாகி இருந்தது. நேற்று நடந்த நகராட்சி கூட்டத்தில், தலைவர் செல்வராஜ் பேசுகையில், “”காவிரி மற்றும் அமராவதி ஆற்றில் போதிய தண்ணீர் இல்லை. இந்நிலையில், 68 கோடி ரூபாய் மதிப்பில் காவிரி குடிநீர் திட்டப்பணிகள் நடந்து வருகிறது.
மேலும், 127 இடங்களில் ஃபோர்வெல் அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால், சில பத்திரிகைகள் அதையெல்லாம் எழுதாமல், குறைகளை மட்டும் எழுதி கவுன்சிலர்களையும், பொது மக்களையும் உசுப்பி விடுகின்றனர்,” என்றார். இதனால், கூட்ட அரங்கில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.