தினமணி 02.08.2010
கல்வித் தரத்தை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா?
பட்டுக்கோட்டை, ஆக. 1: தமிழகத்திலுள்ள ஊராட்சி, நகராட்சித் தொடக்கப் பள்ளிகளில் மாறிவரும் காலத்துக்கேற்ப கல்வியின் தரம் உயரவில்லை. இதனால்தான் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆங்கில வழி பள்ளிகளில் சேர்ப்பதையே விரும்புகின்றனர்.
குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் உள்ளிட்ட மிகப் பெரிய அறிஞர்கள் கிராமத்திலுள்ள ஒன்றியப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று, வாழ்க்கையில் உயர்ந்த நிலையை எட்டிப் பிடித்தனர். ஆனால், தற்போது ஒன்றிய, நகராட்சித் தொடக்கப் பள்ளிகளில் தரமான கல்வி அளிக்கப்படுவதில்லை என்று பெற்றோர்கள் நினைக்கின்றனர். இதனால், நகர்ப் பகுதிகளில் உள்ள ஆங்கில வழி பள்ளியில் தங்கள் குழந்தைகள் படிப்பதையே அவர்கள் விரும்புகின்றனர்.
இதில் ஓரளவு நியாயம் இருப்பதாக கூறும் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில் 5-ம் வகுப்பு முடித்து 6-ம் வகுப்பில் சேரும் நிலையிலும் பெரும்பாலான மாணவ– மாணவிகளுக்கு தமிழைக்கூட சரளமாகப் படிக்கத் தெரியவில்லை. எளிமையான சொற்களை எழுதத் தெரியவில்லை. கணிதம், ஆங்கிலப் பாடங்களின் நிலையோ மிகவும் மோசம்.
தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆங்கிலப் பள்ளி ஆசிரியர்களைவிட திறமை குறைந்தவர்கள் அல்லர். ஆங்கில மழலையர் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பலர், ஆசிரியர் பயிற்சி பெறாதவர்கள். தொடக்கப் பள்ளி ஆசிரியர்களைப் போல அவர்களுக்கு பணியிடைப் பயிற்சிகள் எதுவும் அளிக்கப்படுவதில்லை. கற்றலின் இனிமை போன்ற பயிற்சிகளும் அவர்களுக்கு இல்லை.
ஆங்கிலப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களை அப் பள்ளி நிர்வாகம் கெடுபிடி செய்து வேலை வாங்குகிறது. இதனால், அங்கு கல்வித் திறன் பேசப்படுகிறது.
ஆனால், ஒன்றிய, நகராட்சித் தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் திறன் மெச்சும்படியாக இல்லை. இதற்குக் காரணம், தொடக்கப் பள்ளி ஆசிரியர்களை கெடுபிடி செய்து வேலை வாங்க கல்வி அலுவலர்கள் முனைவதில்லை.
ஒன்றியப் பள்ளிகளுக்கான உதவிக் கல்வி அலுவலரும், கூடுதல் உதவிக் கல்வி அலுவலரும் தமக்குக் கீழுள்ள நூற்றுக்கணக்கான ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குதல், பொது வைப்பு நிதியிலிருந்து முன் பணம் பெற்றுத் தருதல், ஓய்வூதியம் பெற்றுத் தருதல் போன்ற பணிகளுக்கே முன்னுரிமை தர வேண்டியுள்ளது. இதனால், ஒன்றியப் பள்ளிகளை அவர்கள் ஆய்வு செய்வது குறைந்து வருகிறது.
இடைநிலைக் கல்வியைப் பொறுத்தவரை, ஒரு வருவாய் மாவட்டத்துக்கு 2 அல்லது 3 மாவட்டக் கல்வி அலுவலர்களும், வருவாய் மாவட்ட அளவில் ஒரு முதன்மைக் கல்வி அலுவலரும் உள்ளதால், அவர்களின் பள்ளி மேற்பார்வைப் பணி சிறப்பாக உள்ளது.
ஆனால், தொடக்கக் கல்வி தனி இயக்ககமாக உள்ளதால், வருவாய் மாவட்ட அளவில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஒருவர்தான் உள்ளார். அவருக்குக் கீழே ஒரு ஒன்றியத்துக்கு இரு உதவிக் கல்வி அலுவலர்கள் உள்ளனர். ஆனால், பள்ளிகளின் எண்ணிக்கையோ அதிகம். இதனால் அவர்களால் ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில் மேற்பார்வைப் பணியைச் சிறப்பாக செய்ய முடிவதில்லை.
இடைநிலைக் கல்விக்கு உள்ளது போல இரு தொடக்கக் கல்வி அலுவலர்கள் இருந்தால் மட்டுமே நல்ல பலன் கிடைக்கும். மேலும், தொடக்கக் கல்வியை இடைநிலை, மேல்நிலை கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும்.
அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில் வகுப்பறை, குடிநீர் வசதி, இருக்கை, கழிப்பறை போன்ற வசதிகள் செய்யப்பட்டு பள்ளிகளின் தோற்றம் மாறியுள்ளது. ஆனால், அங்கு பயிலும் மாணவர்களின் கல்வித் தரம் மட்டும் உயரவில்லை.
இந்தப் பள்ளிகள் மீண்டும் பொதுமக்களின் நம்பிக்கையை பெறுவதற்கு, நகர்ப்புற பள்ளிகளுக்கு இணையாக கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டும். பாடத் திட்டத்தை மாற்றுவது, புதிய கற்பித்தல் நுட்பம் அறிமுகப்படுத்துவது ஆகியன மட்டும் போதாது. ஆசிரியர்களின் போக்கிலும் மாற்றம் தேவை.
ஆசிரியர் பணி தொழில் அல்ல, தொண்டு என்பதை உணர்ந்து அவர்கள் செயல்பட வேண்டும். தற்போது உயர்நிலைப் பள்ளிகளில் நடைமுறையில் இருப்பதைப் போல ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளிலும் பள்ளி முடிந்த பிறகு கூடுதலாக 1 மணி நேரம் சிறப்பு வகுப்புகள் நடத்தி மாணவர்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டும்.
ஒன்றியப் பள்ளிகளை அடிக்கடி ஆய்வு செய்யும் கூடுதல் மேலாண்மைக் கட்டமைப்பும், நிர்வாக சீர்திருத்தமும்தான் தற்போதைய அவசியத் தேவை. இதை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என்கின்றனர் கல்வியாளர்கள்.
கிராம அளவில் தொண்டுள்ளம் கொண்ட இளைஞர்கள், ஊராட்சித் தலைவர்கள் பள்ளி வளர்ச்சியில் அதிக அக்கறை காட்ட வேண்டும். ஓய்வு பெற்ற கல்வியாளர்களும் இதுபோன்ற பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்து தீர்வு காண முயற்சிக்க வேண்டும். இவற்றைச் செய்தால் ஒன்றியப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரமும் நிச்சயம் உயரும்.