களியக்காவிளையில் பூட்டிக் கிடந்த கட்டணக் கழிவறைகள்
களியக்காவிளை பேருந்து நிலையத்தில், தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள பேரூராட்சி நிர்வாகத்துக்குச் சொந்தமான இரு கட்டணக் கழிவறைகள் சனி, ஞாயிற்றுக்கிழமை என இரு நாள்களாக பூட்டிக் கிடந்ததால் பயணிகள் அவதிக்குள்ளாயினர்.
களியக்காவிளை பேருந்து நிலையத்தில் புதிய கழிவறை மற்றும் வாம்பே கழிவறை என இரு கட்டணக் கழிவறைகள் உள்ளன. அருகருகே அமைந்துள்ள இக்கழிவறைகளுக்கான கட்டணம் வசூலிக்கும் உரிமம், தனியாருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. இக்கட்டண கழிவறையில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் கூறப்பட்டு வந்த நிலையில், வார நாள்களில் அடிக்கடி செயல்படாமல் பூட்டிக் கிடப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இக்கழிவறைகள் சனி, ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து இருநாள்கள் செயல்படாமல் பூட்டிக் கிடந்தது.
இப்போது மண்டைக்காடு கோவில் திருவிழா மற்றும் சிவராத்திரியையொட்டி கேரளத்திலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் களியக்காவிளைக்கு வந்து செல்லும் நிலையில், இந்த கட்டணக் கழிவறைகள் திறக்காமல் மூடிக்கிடப்பதால் பலரும் அவதிப்பட்டனர்.
எனவே பூட்டிக்கிடக்கும் இக்கட்டண கழிவறை குத்தகை உரிமத்தை பேரூராட்சி நிர்வாகம் ரத்து செய்வதுடன், பேரூராட்சி நிர்வாகம் மூலம் கட்டணம் வசூலிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பலதரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.