தினமணி 19.11.2009
கழிப்பிடத்தில் கட்டணம் வசூல்: துப்புரவு ஆய்வாளர் சஸ்பெண்ட்
சென்னை, நவ.18: சென்னை பிராட்வே பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த பொதுக் கழிப்பிடங்களில் கட்டணம் வசூலிக்கப்பட்டதற்காக, 49-வது வார்டு துப்புரவு ஆய்வாளரை தாற்காலிக பணி நீக்கம் செய்து மேயர் மா. சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
பிராட்வே பஸ் நிலையத்தில் சாலைகள் பழுதடைந்துள்ளன, குப்பைகள் தேங்கியுள்ளன.
பஸ் நிலைய நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் வைத்திருப்பதால், பயணிகள் சிரமப்படுகின்றனர் என்று புகார்கள் வந்தன.
இதைத்தொடர்ந்து பஸ் நிலையத்தை புதன்கிழமை ஆய்வு செய்த மேயர் மா. சுப்பிரமணியன், ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த 50 கடைகளை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இக் கடைக்காரர்கள் மீண்டும் நடைபாதையை ஆக்கிரமிக்க அனுமதிக்கக் கூடாது என்று மாநகர போக்குவரத்துக் கழக அலுவலர்களுக்கு மேயர் உத்தரவிட்டார்.
பஸ் நிலையத்தில் உள்ள 4 பொதுக் கழிப்பிடங்களையும், உடனடியாக மாநகராட்சி கட்டுப்பாட்டில் கொண்டுவந்து எந்தவித கட்டணமும் வசூலிக்காமல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என்றார்.
கட்டணம் வசூலிக்கப்பட்டதற்காக, 49-வது வார்டு துப்புரவு ஆய்வாளரை தாற்காலிக பணி நீக்கம் செய்து மேயர் உத்தரவிட்டார்.