தினமலர் 18.08.2012
கழிவறை இணைப்புகளை பாதாள சாக்கடையில் விட சிறப்பு சலுகை
ஊட்டி:ஊட்டி கோடப்பமந்து கால்வாயில் திறந்தவெளியில் விடப்பட்டுள்ள வீடுகளின் கழிவறை இணைப்புகளை பாதாள சாக்கடைக்குள் விட சிறப்பு சலுகையுடன் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.ஊட்டி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 27 வார்டு மக்களின் கழிவறை மற்றும் கழிவுநீர் ஊட்டி நகரின் மத்தியில் ஓடும் கோடப்பமந்து கால்வாயில் செல்கிறது. தவிர, மழைநீரும் இக்கால்வாயில் செல்லும் நிலையில், ஊட்டி ஏரியில் தான் இவை அனைத்தும் கலக்கின்றன. இதனால், சுகாதார சீர்கேடு அதிகரித்து, ஏரியின் ஒரு பகுதி கழிவுகளால் சூழ்ந்துள்ளது. கால்வாயில் கழிவுகள் செல்வதை தவிர்க்கும் நோக்கில் நகரில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டு, வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களின் கழிப்பறை, சமையலறை கழிவுகள், குளியலறை நீர் ஆகியவற்றை வெளியேற்றும் இணைப்புகள் பாதாள சாக்கடையில் இணைக்கப்பட்டன. இதன் மூலம் கழிவுகள் கலக்காத நீர் மட்டுமே கோடப்பமந்து கால்வாயில் செல்லும், என எதிர்பார்க்கப்பட்டது.