தினமலர் 31.08.2012
கழிவுநீரை தெருவில் விடுபவர்களுக்கு அபராதம் நகராட்சி கூட்டத்தில் முடிவு
திருவள்ளூர் : “கழிவுநீரை தெருவில் விடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்’ என, நகராட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
திருவள்ளூர் நகராட்சிக் கூட்டம் தலைவர் பாஸ்கரன் தலைமையில், நேற்று நடந்தது. ஆணையர் சரவணக்குமார் முன்னிலை வகித்தார்.
திரு.வி.க., பேருந்து நிலையத்தில், 75 ஆயிரம் ரூபாய் செலவில் மின் விளக்கு வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்ட, 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நடந்த விவாதம்:
சங்கர் (தே.மு.தி.க.,): 17வது வார்டுக்குட்பட்ட முகம்மது அலி, 2, 3வது சந்துகளில் குப்பை சரியாக வாருவதில்லை. கழிவுநீரும் தேங்கி நிற்கிறது. இப்பகுதியில், மூன்று பள்ளிக் கூடங்கள் இருப்பதால், மாணவர்கள் தெருக்களில் நடப்பதற்கு சிரமப்படுகின்றனர். மழைக் காலத்தில், நகராட்சிப் பள்ளியில் தண்ணீர் புகுவதை தடுக்க வேண்டும்.
தலைவர் பாஸ்கரன்: உறுப்பினர் தெரிவித்த இடங்களில், குப்பைத் தொட்டிகள் வைக்கப்படும். பள்ளியில் தண்ணீர் தேங்குவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
ரேணுகாதேவி (அ.தி.மு.க.,): திரு.வி.க., பஸ் நிலையம் எதிரே மதுபான கடைகள் உள்ளதால், அங்கு குடித்துவிட்டு பஸ் நிலையத்துக்குள் வந்து, சிலர், கலாட்டா செய்கின்றனர். பஸ் நிலையத்துக்குள் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும்.
ஆணையர் சரவணக்குமார்: பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அங்கு காவல் நிலையம் அமைக்கக் கோரி, மாவட்ட எஸ்.பி.,க்கும் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
ராகவன் (அ.தி.மு.க.,): சிலர் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை தெருவில் விடுகின்றனர். இதனால், சாலைகள் சேதம் அடைகின்றன.
பாஸ்கரன்: தெருக்களில் கழிவுநீர் விடுபவர்கள், கட்டுமானக் கழிவுப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு வந்து கொட்டுபவர்கள் மீது, நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதிக்க வேண்டும்.
கலெக்டர் குடியிருப்பைத் தவிர, மற்ற அதிகாரிகளின் குடியிருப்புகள், அலுவலகங்களில் நகராட்சி துப்புரவு ஊழியர்களை பணியாற்ற அனுமதி அளிக்கக் கூடாது.இவ்வாறு விவாதம் நடந்தது.