கவுண்டம்பாளையம்- வடவள்ளி கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு தடையில்லா மின்சாரம்
கவுண்டம்பாளையம்- வடவள்ளி கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு தடையில்லா மின்சார வசதியை கோவை மேயர் செ.ம. வேலுசாமி புதன்கிழமை துவக்கி வைத்தார்.
கோவை மாநகராட்சியின் மேற்கு மண்டலத்துக்கு உள்பட்ட கவுண்டம்பாளையம்- வடவள்ளி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் கீழ் தினமும் 11 எம்.எல்.டி. குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
கவுண்டம்பாளையம் நீருந்து நிலையத்துக்குத் தடையில்லா மின்சாரம் பெறுவதற்காக ரூ.48.67 லட்சம் மாநகராட்சி சார்பில் மின்வாரியத்துக்குச் செலுத்தப்பட்டது.
இப்பணி நிறைவடைந்து மேயர் செ.ம. வேலுசாமி புதன்கிழமை துவக்கி வைத்தார்.
கவுண்டம்பாளையத்தில் 5, 6, 7, 8 மற்றும் 9 வார்டுப் பகுதிகளும், வடவள்ளிப் பகுதியில் 16 மற்றும் 19-ஆவது வார்டுப் பகுதி மக்களும் பயன் பெறுவர். இத்திட்டத்தால் 26 ஆயிரத்து 587 இணைப்புகளுக்கு குடிநீர் கிடைக்கும். மொத்தம் 1.42 லட்சம் பேர் பயன்பெறுவர்.
கவுண்டம்பாளையம்- வடவள்ளி வார்டுப் பகுதிகளுக்கு கடந்த 2011 மக்கள் தொகை அடிப்படையில் 14 ஆயிரத்து 206 மக்கள் பயன் பெறும் வகையில் தனி நபருக்கு 70 லிட்டரில் இருந்து 135 லிட்டராக உயர்த்தும் வகையில் குடிநீர் குழாய் பதிக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இதற்காக ரூ.13 கோடி செலவிடப்பட உள்ளது. ஒப்பந்தப் புள்ளி உறுதி செய்யப்பட்டதும் பணிகள் விரைவில் துவங்கும் என்று மேயர் செ.ம. வேலுசாமி தெரிவித்தார்.
துணை ஆணையர் சு.சிவராசு, மாநகரப் பொறியாளர் சுகுமார், தமிழ்நாடு மின்வாரிய முதன்மைப் பொறியாளர் தங்கவேல், மேற்பார்வைப் பொறியாளர் குருராஜன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் இக்பால், செயற்பொறியாளர் காளியண்ணன், மாநகராட்சி மேற்கு மண்டலத் தலைவர் சாவித்திரி பார்த்திபன், நியமனக் குழுத் தலைவர் ராஜேந்திரன், நிதிக் குழுத் தலைவர் பிரபாகரன், மாமன்ற உறுப்பினர்கள் மயில்சாமி, மாரிமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.