தினமலர் 16.08.2010
கவுன்சிலர்களின் குடும்பத்தினர் மாநகராட்சி இனங்களை குத்தகை
ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் தி.மு.க., அ.தி.மு.க., கவுன்சிலர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஏலம் எடுத்துள்ளதால், அவர்கள் மீது மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமாறு, காங்கிரஸ் கவுன்சிலர் புனிதன் புகார் தெரிவித்துள்ளார்.சென்ற சில நாட்களுக்கு தர்மபுரி நகராட்சி தி.மு.க., துணைத்தலைவர் தங்கராஜ், தி.மு.க., கவுன்சிலர் சரவணன் ஆகியோர் அவர்களது குடும்ப உறுப்பினர் பெயரில் டெண்டர் எடுத்து பல்வேறு பணிகள் மேற்கொண்டனர். இப்பிரச்னை நகராட்சி நிர்வாகத்துக்கு சென்றது. அதைத்தொடர்ந்து இருவரும் “சஸ்பெண்ட்‘ செய்யப்பட்டனர்.ஈரோடு மாநகராட்சியில் கழிப்பறை, பஸ் ஸ்டாண்டு, காய்கறி மார்க்கெட், கனிமார்க்கெட் உள்பட பல்வேறு இனங்களுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. பல இனங்கள் கவுன்சிலர்களின் பினாமி பெயரில் எடுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி ஆறாவது வார்டு தி.மு.க., கவுன்சிலர் விஜயலட்சுமி. இவரது கணவர் சேகர் பெயரில், நேதாஜி தினசரி சந்தை ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக காங்கிரஸ் கவுன்சிலர் புனிதன், கவுன்சிலர்களின் குடும்பத்தினர் ஏலம் எடுத்து தொடர்பாக நகராட்சி நிர்வாக இயக்குனருக்கும், தேர்தல் கமிஷனுக்கும் புகார் மனு அனுப்ப உள்ளார்.புனிதன் கூறியதாவது:ஈரோடு மாநகராட்சியில் நேதாஜி தினசரி சந்தையை 2006-07ம் ஆண்டுக்கு பெரியசாமி என்பவர் 87 லட்சத்து 75 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்துள்ளார். 2007-08ம் ஆண்டுக்கு கவுன்சிலர் விஜயலட்சுமியின் கணவர் சேகர், 64 லட்சத்து 10 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்துள்ளார். கவுன்சிலர்களின் குடும்பத்தினர் ஏலம் எடுக்க கூடாது என்ற விதிமுறை மீறப்பட்டுள்ளது. இது தொடர்பாக நகராட்சி நிர்வாக இயக்குனருக்கும், தேர்தல் கமிஷனுக்கு புகார் அனுப்ப உள்ளேன்.அ.தி.மு.க., கவுன்சிலர்கள் இருவர் அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்கள் பெயரில் ஏலம் எடுத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.