தினமலர் 05.05.2010
காணாமல் போன கண்மாய்கள் கணக்கெடுப்பு ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அரசு உத்தரவு
கம்பம் : தமிழகம் முழுவதும் உள்ள கண்மாய்கள் மற்றும் குளங்கள் பற்றிய கணக்கெடுப்பை நடத்தி, ஆக்கிரமிப்பு இருந்தால் நடவடிக்கை எடுத்து மீட்க அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் அபாயகரமான நிலையில் இருப்பதாக, புவியியல் வல்லுனர்கள் சமீபத்திய ஆய்வுகளில் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக அரசிற்கு அறிக்கை ஒன்றை கொடுத்துள்ளனர். அதில், நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக குறைந்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான சிறிய கண்மாய்கள், குளங்கள் பெரும்பாலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, விளைநிலங்களாகவும், வீடுகளாகவும் மாற்றப்பட்டு விட்டது தான் நிலத்தடி நீர்மட்டம் குறைவிற்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.
இதனால் மழை நீர் மற்றும் மழை காலங்களில் ஏற்படும் வெள்ளநீர் தேங்காமல், வழிந்தோடி வீணாகிறது. ஊரைச் சுற்றியுள்ள கண்மாய் மற்றும் குளங்களில் தண்ணீர் தேங்கினால் தான், நிலத்தடி நீர் மட்டம் உயரும். ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விட்டதால், நிலத்தடி நீர் மட்டும் அபாயகரமான அளவிற்கு சென்றுள்ளது என்றும் எச்சரித்துள்ளனர்.
அதற்கு மாற்று என்ன வழி என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் சம்பந்தப்பட்ட கிராம கணக்கு புத்தகங்களில் உள்ள கண்மாய்கள் மற்றும் சிறிய குளங்கள் பற்றிய விபரங்களை சேகரிக்கவும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால், உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி, தண்ணீர் தேங்குமாறு செய்யவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
முதற்கட்டமாக வி.ஏ.ஓ.,க்கள் மற்றும் தாலுகா சர்வேயர்கள் இதற்கான பணிகளில் ஈடுபட கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட ஆர்.டி.ஓ., தாசில்தார் மற்றும் உள்ளாட்சி அதிகாரிகள் மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது….