தினமலர் 03.03.2010
கான்கிரீட் வீடு கட்ட மானியம் : மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின்
மதுரை : “” குடிசைப் பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு சொந்த இடம் இருந்தால் கான்கிரீட் வீடு கட்டிக் கொள்ள மானியம் வழங்கப்படும்,”” என, மதுரை மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின் பேசினார்.மதுரை தமுக்கம் மைதானத்தில் களஞ்சியம் அமைப்பின் சார்பில் மகளிர் விழா நடந்தது. இதில் அவர் பேசும்போது, “”பல ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில் மாநகராட்சி பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற முயன்று கொண்டுஇருக்கின்றன. குடிசைப் பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு சொந்த இடம் இருந்தால் கான்கிரீட் வீடு கட்டிக் கொள்ள 99 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும்,” என்றார்.
களஞ்சிய ஒருங்கிணைப்பாளர் அகிலாதேவி பேசும்போது, “”களஞ்சியம் அமைப்பில் 998 குழுக்களும், 15,000 உறுப்பினர்களும் உள்ளனர். ஆறு கோடி ரூபாய் சேமிப்பும், வங்கிக்கடனாக 35 கோடிரூபாயும் உள்ளது. ஒரு லட்சத்து 122 ரூபாய் சுய தொழில் தொடங்க வெளிக்கடனாக கொடுத்துள்ளோம். எதிர்காலத்தில் மாநகராட்சியுடன் இணைந்து,அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் மூலம் குழுவினருக்கு கடன் வழங்க உள்ளோம்,” என்றார்.களஞ்சிய இயக்க செயற்குழு உறுப்பினர் தாயம்மாள் வரவேற்றார். மாநகராட்சி தலைமை பொறியாளர் சக்திவேல், முதன்மை சுகாதார அலுவலர் சுப்பிரமணியன், களஞ்சிய நிர்வாகி பத்மாவதி, தானம் அறக்கட்டளை இயக்குனர் வாசிமலை கலந்து கொண்டனர். குழு உறுப்பினர் கவுரி நன்றி கூறினார்.