தினமலர் 12.02.2010
கான்கிரீட் வீட்டு வசதி திட்டம் கணக்கெடுப்பு பணி துவக்கம்
திருப்பூர் : தமிழக அரசின் கான்கிரீட் வீட்டு வசதி திட்டத்திற்காக, திருப்பூர் மாவட்ட அளவில் 13 ஊராட்சிகளில், முன்னோட்ட கணக்கெடுப்பு பணி துவங்கியுள்ளது. இலவச கலர் “டிவி‘, காஸ் இணைப்பு, உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான மருத்துவ காப்பீடு திட்டம் என, பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இவ்வரிசையில், கான்கிரீட் வீட்டு வசதி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், சொந்த பட்டா அல்லது பத்திரம் உள்ள இடத்தில், குடிசையில் வசிப்போருக்கு சொந்தமாக வீடு கட்டிக்கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
முதல்கட்டமாக, ஒன்றிய பகுதிகளில் உள்ள ஊராட்சிகள் வாரியாக, சொந்த இடத்தில், குடிசையில் வசிப்போர் கணக்கெடுப்பு துவங்கியுள்ளது. திருப்பூர் மாவட்ட அளவில், ஒன்றியத்துக்கு ஒரு ஊராட்சி என்ற அடிப்படையில், 13 ஊராட்சிகளில் வீட்டு வசதி திட்டத்திற்கான முன்னோட்ட பணிகள் துவங்கியுள்ளன. இருப்பினும் மாவட்ட நிர்வாகத்தின் வாய்மொழி உத்தரவாக, அனைத்து ஊராட்சிகளிலும் குடிசைகள் கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இதுதொடர்பாக கலெக்டர் சமயமூர்த்தி தலைமையில் நடந்த பயிற்சி வகுப்பில், கணக்கெடுப்பின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து, திட்ட அலுவலர் ரேணுகாதேவி விளக்கினார்.
பின்பற்ற வேண்டிய வழிமுறை:
* முற்றிலும் ஓலை மூலமாக வேயப்பட்ட குடிசையாக இருக்க வேண்டும்.
* சொந்தமாக பட்டா பெற்ற இடமாக இருக்க வேண்டும்.
* குடிசையை வாடகைக்கு விட்டிருக்கக்கூடாது.
* பயனாளிகளுக்கு வேறு இடத்தில் சொந்த வீடு இருக்கக்கூடாது.
* ஆட்சேபணை இல்லாத பட்டா நிலமாக இருக்க வேண்டும்.
முன்னோட்ட கணக்கெடுப்பின் போது, பயனாளிகளை கண்டறிவதற்காக, 28 வகையான கேள்விகள் அடங்கிய விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி உதவியாளர் மற்றும் மக்கள் நலப்பணியாளர் அடங்கிய குழுவினர், கணக்கெடுப்பு பணியை மேற்கொள்வர். வரும் 16ம் தேதி வரை கணக்கெடுப்பு பணியை முடித்து, ஒன்றிய நிர்வாகத்துக்கு அறிக்கை அளிப்பர். 17ம் தேதி முதல் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊ) சரிபார்ப்பு பணியை மேற்கொள்கின்றனர். சரிபார்ப்பு பணியை 20ம் தேதிக்குள் முடித்து, 21ம் தேதி, மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்படும்.
முன்னோட்ட பணிகள் தேர்வு செய்யப்பட்ட 13 ஊராட்சிகளில் மட்டும் நடந்தாலும், அனைத்து ஊராட்சிகளிலும் குடிசை கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. வார்டு உறுப்பினர்களின் உதவியுடன், பிற ஊராட்சிகளில் குடிசை கணக்கெடுப்பு நடந்து வருகிறது. அதிகாரிகள் கூறுகையில், “ஒன்றியம் வாரியாக பெறப்படும் கணக்கெடுப்பு அறிக்கையை தொடர்ந்து, அரசு சார்பில், 2010ம் ஆண்டு இறுதியில் துவங்கி, 2016ம் ஆண்டு வரை குடிசைகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் வீட்டு வசதி திட்டம் செயல்படுத்தப்படும்,’ என்றனர்.