தினகரன் 10.08.2010
காமன்வெல்த் போட்டிக்காக நடைபாதை உணவு கடைகள் அகற்றம்
புதுடெல்லி, ஆக. 10: மாநகராட்சி எல்லைக்குள் நடைபாதைகளில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள உணவுக் கடைகள் அகற்றப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுபற்றி மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி என்.கே.யாதவ் கூறியதாவது:
காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்காக நகரை அழகுபடுத்தும் பணி வேகமாக நடந்து வருகிறது. தெருக்களில் குப்பை சேராமல் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்து வருகிறது. அதன் முதல் நடவடிக்கையாக தெருவோர காய்கறி கடைகள் அகற்றப்பட்டன. அடுத்த நடவடிக்கையாக நடைபாதைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள உணவுக் கடைகளை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, விளையாட்டு மைதானங்களை சுற்றிலும் நடைபாதைகளில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள உணவுக் கடைகள்(கையேந்தி பவன்) அகற்றப்படும். அதேபோல நகரின் மார்க்கெட் பகுதிகளில் உள்ள உணவு கடைகளும் அகற்றப்படும்.
இப்போது நடைபாதைகளில் இயங்கும் 5 முதல் 10 சதவீத உணவுக் கடைகள் மட்டுமே அனுமதி பெற்றவை. மற்ற உணவு கடைகள் எல்லாம் ஆக்கிரமிப்பு கடைகள்தான். இவை அனைத்தும் விரைவில் அகற்றப்படும். இவ்வாறு யாதவ் கூறினார்.
மக்கள் தொடர்பு இயக்குநர் தீப் மாத்தூர் கூறுகையில், “கடைகளை அகற்றினாலும் ஒருவாரத்தில் அதே இடத்தில் அந்த கடைகள் மீண்டும் செயல்படத் தொடங்கி விடுகின்றன. அப்படி நடக்காமல் போலீசார்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்றார்.
இதற்கிடையில் நடைபாதை உணவுக் கடைகளை அகற்ற அந்த பகுதியில் வசிப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுபற்றி வசந்த் கஞ்ச் பகுதியைச் சேர்ந்த ஆதித்யா பன்சால் கூறுகையில், “தெருவோர கையேந்தி பவன்களில் விற்கப்படும் பேல் பூரி, கோல் கப்பா போன்ற சில குறிப்பிட்ட வகைகளை விரும்பி சாப்பிடுகிறவர்கள் டெல்லியில்தான் அதிகம். இந்த கடைகளை அகற்றுவதால் அவர்கள்தான் பாதிக்கப்படுவார்கள். மேலும் நகரை அழகுபடுத்துகிறோம் என்று கூறிக் கொண்டு ஏழை எளிய வியாபாரிகளின் வருமானத்தில் கைவைக்கக் கூடாது” என்றார்.
நடைபாதைகளில் வைத்திருக்கும் துணிக்கடைகள், பான் ஷாப், செருப்பு தைக்கும் கடை போன்ற கடைகளையும் அகற்ற மாநகராட்சி தீர்மானித்துள்ளது.