தினமணி 21.10.2010
காய்ச்சல் பரவுவதைத் தடுக்க குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய நடவடிக்கை
சேலம், அக்.20: சேலம் நகரில் காய்ச்சல் பரவி வருவதைத் தடுக்க மாநகராட்சி குடிநீர்த் தொட்டிகள் புதன்கிழமை சுத்தம் செய்யப்பட்டன.
சேலத்தில் கடந்த சில வாரங்களாக டெங்கு காய்ச்சல் தீவிரமாகப் பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்துவதற்காக மாநகர நிர்வாகம் தண்ணீர் மூலம் உற்பத்தியாகி பரவும் கொசுக்களைக் கட்டுப்படுத்த புகை மருந்து அடித்தல் உள்ளிட்ட பணிகளைச் செய்து வருகிறது. மேலும் மாநகராட்சிப் பகுதி முழுவதிலும் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேட்டூரில் மின்வாரிய பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இரண்டு நாள்கள் குடிநீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாப்பேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி பகுதிகளிலுள்ள 19 பெரிய குடிநீர்த் தொட்டிகளை துப்புரவுப் பணியாளர்கள், குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் புதன்கிழமை சுத்தம் செய்தனர்.
அம்மாப்பேட்டை உதவி செயற் பொறியாளர் சீனிவாசன், அஸ்தம்பட்டி உதவி செயற் பொறியாளர் கமலநாதன் ஆகியோர் பணிகளை மேற்பார்வையிட்டனர்.