தினமணி 17.12.2009
காய்ச்சல் பாதிப்பைத் தடுக்க நடவடிக்கை– ஆட்சியர்
விருதுநகர், டிச.16: விருதுநகர் மாவட்டத்தில் சிக்குன் குனியா மற்றும் பருவ மாறுதலால் வரக்கூடிய காய்ச்சல் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் ஆட்சியர் சிஜி தாமஸ்வைத்யன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில் அவர் கூறியதாவது:
காய்ச்சல் பரவுவதைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் எடுத்து வருகிறது. நகராட்சிப் பகுதிகளில் கொசு ஒழிப்புப் பணிக்காக தனியாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, வார்டுகளை ஆறு பகுதிகளாகப் பிரித்து, தினமும் மருந்து தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பணியை துப்புரவுப் பணியாளர்கள் கண்காணிக்க வேண்டும்.
நகராட்சிப் பகுதிகளில் உள்ள பொதுக் கட்டடங்கள், செப்டிக் டேங்க் மற்றும் காற்றுப் போக்கு குழாய்களில் நைலான் வலைகளைக் கட்டி, கொசுப் பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அனைத்து மருத்துவமனைகளிலும் காலை,மாலையில் கொசு மருந்து தெளிக்க வேண்டும். ஒவ்வொரு ஊராட்சியிலும் கிராம சுகாதார மேம்பாட்டுóக்குழு மூலம் நியமிக்கப்பட்டுள்ள தாற்காலிக பணியாளர்கள் மூலம் அந்தந்த பகுதிகளில் கொசு ஒழிப்புப் பணிகள் நடைபெறும். இதற்கு ஊராட்சித் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார் அவர்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திடட் அலுவலர் ராமமூர்த்தி, மகளிர் திட்ட அலுவலர் சரோஜா, மருத்துவத்துறை துணை இயக்குநர் வடிவேலன், பாலசுப்பிரமணியன், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் கதிர்வேல், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராஜராஜேஸ்வரி, அனைத்து நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.