தினமணி 3.11.2009
காரைக்குடியில் ஒரு முன்மாதிரி நகராட்சிப் பள்ளி
காரைக்குடி, நவ. 2: பிரமாண்டமான கட்டடம், கல்லூரிக்கு இணையான ஆய்வகம், ஷூ, டை உள்ளிட்ட சீருடை என காரைக்குடி நகராட்சியின் நடுநிலைப் பள்ளியைப் பார்த்து பலர் வியந்து வருகின்றனர்.
காரைக்குடி செக்காலையில் ராம.சு. ராமநாதன் செட்டியார் நகர்மன்ற நடுநிலைப்பள்ளி உள்ளது. பள்ளியின் ஆசிரியர்களும், பெற்றோர்–ஆசிரியர் கழகமும் இணைந்து இப் பள்ளியை மெருகூட்ட முடிவெடுத்து 2மாதங்களுக்கு ஒரு முறை ஆலோசனை கூட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
சாதாரண கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள், கிழிந்த ஆடைகள், உடைந்த சிலேட்டுக்கள், சிதைந்த புத்தகப் பைகள் என வந்த இப் பள்ளியின் மாணவ, மாணவிகள் பலர் இப்போது முற்றிலும் மாறுபட்டு வரத் தொடங்கியுள்ளனர். பள்ளியின் சேர்க்கையும் அதிகரித்துள்ளது.
இப் பள்ளியின் சிறப்புகள் குறித்து தலைமையாசிரியர் ஆர். ரவீந்திரன் கூறியது:
1 முதல் 8 வரை வகுப்புகள் உள்ளன. மொத்தம் 590 மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். 2 ஆசிரியர், 12 ஆசிரியைகள் உள்பட 14 பேர் பாடம் நடத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
இப் பள்ளியை 1932-ம் ஆண்டு ராமநாதன் செட்டியார் இலவசத் தொடக்கப்பள்ளியாகத் தொடங்கினார். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் நகராட்சி நிர்வாகத்தின் கீழ் இந்தப் பள்ளி வந்தது.கடந்த 2008-ம் ஆண்டுக்கு முன்னர் ஓட்டுக்கூடமாக சாதாரணக் கட்டடங்களாகத்தான் இருந்தன.
அண்ணாநகர், செக்காலை, பர்மா காலனி, வைரவபுரம், டி.டி. நகர், ரயில்வே குடியிருப்பு, கீழத்தெரு, போலீஸ் குடியிருப்பு என நகரின் பல பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் இங்கு படிக்கின்றனர்.
பெரும்பாலும் ஆட்டோ ஓட்டுநர், கூலித் தொழிலாளிகள் என சாதாரண நிலையில் உள்ள குழந்தைகள் இங்கு அதிகம் பயின்று வருகின்றனர்.
நகர்மன்றத் தலைவர் எஸ். முத்துத்துரை கூறியதாவது:
படிப்பில் பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு மாலை நேரத்தில் சிறப்பு வகுப்புகள் மூலம் பாடம் சொல்லித் தருகிறோம்.
இப் பள்ளி மாணவி ஆர். நந்தினி, விக்னேஷ் ராஜா இருவரும் சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்று பரிசு பெற்றுள்ளனர். இவர்களின் திறனைக்கண்டு கோல்டன் சிங்கார் சதுரங்கக் கழகம் இப் பள்ளியிலேயே மாணவ, மாணவிகளுக்கு பயிற்சியளிக்க முன்வந்திருக்கிறது.
காவல் துறை சார்பில் 150-ம் ஆண்டு விழா மாரத்தான் போட்டியில் இப் பள்ளி மாணவரே முதல் பரிசு பெற்றுள்ளார்.
தமிழில் அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகளை 6, 7, 8-ம் வகுப்பு மாணவர்கள் எழுதி மாவட்ட அளவில் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.
கல்லூரிக்கு இணையான எழுது பலகை, நவீன ஆய்வகம், கணினி ஆய்வகம், ஆடியோ, விடியோ வசதிகள், நவீன கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சர்வ சிக்ஷ அபியான் திட்டத்தின் கீழ் பல உபகரணங்கள் இப் பள்ளியில் இடம்பெற்றுள்ளன என்றார்.
விளையாட்டுத்திடல் தேவை. அதற்காக நகராட்சி நிர்வாகம் முயற்சி எடுத்து வருகிறது. நகரத்தின் நடுவே நகராட்சிப் பள்ளி தொடக்கப்பள்ளி, பின்னர் நடுநிலைப்பள்ளி என்ற நிலையை அடைந்திருக்கிறது. இது உயர்நிலைப் பள்ளியாக வளரவேண்டும் என்பதுதான் தங்களது ஆசை என்றார் பெற்றோர்–ஆசிரியர் கழகத் தலைவர் ஏ. ஷேக்காதர் பாட்ஷா.