தினமணி 22.07.2009
காற்றிலே குடியிருப்பு… நிலத்திலே விவசாயம்…
ஜெம். ஆர். வீரமணி
உணவு, உடை, இருப்பிடம், கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை அனைவரும் பெற வேண்டும் என்பதைத்தான் எல்லா அரசியல் கட்சிகளும் அடிப்படைக் கடமையாக எண்ணிப் பணியாற்றி வருகின்றன. மண்ணை சரியான முறையில் பயன்படுத்தி விளைநிலங்களையும் அதற்குத் தேவையான நீர்ப்பாசன வசதிகளையும் பெருக்குவதன் மூலம்தான் நமது உணவுத் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள முடியும். அதேபோல, நிலப்பரப்பைப் பயன்படுத்தி மட்டுமே நம் மக்களின் இருப்பிடத் தேவையைப் பூர்த்தி செய்தாக வேண்டும்.
சரியான முறையில் நிலவளத்தைப் பயன்படுத்தி கால்வாய், அணைக்கட்டுகள், ஏரிகள், குளங்கள், நீர்த்தேங்கங்கள், மழை நீர்சேகரிப்பு போன்றவற்றை உருவாக்கினால் மட்டும்தான் விவசாயம், பாசனம் மற்றும் குடிநீர் வசதிகள் தட்டுப்பாடின்றிக் கிடைக்கும். அதற்கு, தேவையான நீரை மண்ணுக்கு மேலும் கீழும் சேகரிப்பது முதல் கடமையாகும்.
இன்றைய சூழ்நிலையில் அவரவர் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப வீட்டு வசதி வாய்ப்புகளை எப்படி அளிப்பது என்பதை தொலைநோக்குப் பார்வையுடன் ஆராய்ந்து பார்த்தால் நிலப்பரப்பைப் பாதுகாப்பது எவ்வளவு முக்கியம் என்பது புரியும்.
நாம் அதிகரிக்க முடியாதது நம் நிலப்பரப்பையும் எல்லையையும்தான். குறிப்பாக நம் நாடு அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட நாடு என்பது தெரியும். தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகள் நம் அளவுக்கு அதிக மக்கள்தொகையுள்ள நாடுகள் அல்ல. அதேபோல மேலை நாடுகளை விடவும் நம் நாடு மக்கள் நெருக்கடி உள்ள ஒரு நாடாகத் திகழ்கிறது.
சீரான மக்கள்தொகை, குடும்பக் கட்டுப்பாடு என்ற சூழ்நிலையில் கூட அதிகமான மக்கள்தொகை உயர்வு நம்நாட்டில் தான் உள்ளது. ஒரு விதத்தில் இது பலமாக இருந்தாலும், உலகிலேயே இளைஞர்கள் அதிகமாக வாழும் நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றிருந்தபோதிலும் இந்த மக்கள்தொகை பெருக்கத்தின் தேவைகளைத் தீர்ப்பதற்குச் சரியான சட்டதிட்டங்களை தொலைநோக்குப் பார்வையுடன் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
மக்கள்தொகைப் பெருக்கத்தால் ஏற்படும் இருப்பிடப் பற்றாக்குறை, உணவுப் பற்றாக்குறை போன்றவற்றை தீர்ப்பதற்கான வழிமுறைகளை நாம் கண்டறிந்தாக வேண்டிய கட்டாயம் சமீபகாலமாக அதிகரித்திருக்கிறது.
பலநாடுகளில் நவீன நகரங்களைச் சுற்றிப் பசுமை வளையத்தை உருவாக்கி நல்ல அடர்ந்த மரம், செடி, கொடிகள், புல்தரைகள் என சுற்றுச்சூழலை அதிகரித்து, மழைநீர் மீண்டும் மண்ணுக்குள் சென்று, நிலத்தடி நீர்மட்டம் தாழ்ந்து போகாமல் பாதுகாத்து வருகிறார்கள்.
அதேபோல நகரக் கட்டமைப்புகள் உருவாக்கும் வெப்பத்தையும், மாசு பிரச்னைகளையும் தீர்ப்பதில் மிகவும் கவனமாகச் செயல்படுகிறார்கள். சுற்றுப்புற சூழ்நிலைகள் பசுமையுடையதாக பாதுகாக்க இவை யாவும் மிகவும் இன்றியமையாததாகும். நமது நாட்டிலும் இங்குள்ள தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப மரம், செடி, கொடிகளை ஆங்காங்கே உருவாக்க முடியும். உருவாக்க வேண்டும்.
வீட்டு வசதியற்ற மக்களுக்கு கட்டுப்படியாகக் கூடிய விலையில் பல அடுக்குமாடிக் குடியிருப்புகளை உருவாக்கித் தர வேண்டிய கட்டாயம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில் பசுமையான சுற்றுப்புறச் சூழலை உறுதி செய்யும் விதத்தில் சட்டதிட்டங்களை முறைப்படி மாற்றி அமைப்பதும் அவசியமாகிறது. விவசாய விளைநிலங்களின் பரப்பளவு மிகவும் குறைந்து வரும் நிலையில், உணவு உற்பத்தியில் தன்னிறைவு என்பது மிகப்பெரிய சவாலாக மாறிவிட்டிருக்கிறது. இதை ஒரு விஞ்ஞான, சமுதாயப் பிரச்னையாகக் கருதி ஆராய்ச்சிப்பூர்வமான முடிவு எடுப்போமானால், நமது உணவு உற்பத்தியும் உறுதி செய்யப்பட்டு குடியிருப்புத் தேவையும் பூர்த்தி செய்யப்படும்.
இன்றைய சூழ்நிலையில் நவீன விஞ்ஞான வளர்ச்சியின் அடிப்படையில் பல நாடுகள் அடுக்குமாடிக் கட்டடங்களை கட்டி, எங்களைப் பாருங்கள் என்று மற்ற நாட்டவரின் பார்வையைத் தங்கள் பக்கம் திருப்பியுள்ளன. உலகில் பல நெடிது உயர்ந்த பலமாடிக் கட்டடங்கள் உள்ள நாடுகள் பொருளாதார வளம் மற்றும் பலமிக்க நாடுகளாகவும் அந்நாட்டு மக்கள் சிறந்த வாழ்க்கைத் தரம் உள்ளவர்களாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் கட்டடங்கள், மலேசியாவின் இரட்டை கோபுரம்போல சிங்கப்பூர், துபாய், சீனா, தைவான், கொரியா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் எல்லாம், நிலப்பரப்பை குடியிருப்பு மற்றும் வர்த்தகத் தேவைகளுக்குப் பயன்படுத்துவதைக் குறைத்து விண்ணைத் தொடும் உயரமான கட்டடங்களைக் கட்டி விவசாய நிலப்பரப்பு குறைந்துவிடும் நிலைமையைத் தவிர்க்கிறார்கள்.
நம்நாட்டிலோ, நிலப்பரப்பை மேலும் மேலும் பயன்படுத்தி, விரிவான, பரந்த அகலமான கட்டடங்களைக் கட்டிவருவதை பெருமையாகவும் புத்திசாலித்தனம் என்றும் கருதுகிறோம். இந்தப் போக்கை மாற்றி மண்ணை விவசாயத்துக்கும், விண்ணை குடியிருப்புக்கும் பயன்படுத்துவதல்லவா புத்திசாலித்தனம்?
அதேநேரத்தில், காற்று வெளியைப் பயன்படுத்திப் பல அடுக்குமாடிக் குடியிருப்புகளை அதிகரிக்கும்போது, கழிவுநீர் வசதிகள் உடையதாகவும், தீயணைப்பு போன்ற தகுந்த பாதுகாப்பு உடையதாகவும் அந்த பல அடுக்குமாடிக் குடியிருப்புகள் இருப்பது மிகவும் அவசியம். இதை அரசும் நகர்ப்புற வளர்ச்சிக் குழுமங்களும் உறுதி செய்ய வேண்டும்.
அப்படிக் கட்டப்படும் கட்டடங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரைச் சுத்திகரித்து தோட்டங்களுக்கும், மரம், செடிகளுக்கும் பயன்படும் வகையிலான திட்டங்கள் தீட்டப்பட வேண்டும். இந்த இரண்டு விஷயங்களிலும் வளர்ச்சி அடைந்த நாடுகள் மிகவும் கவனமாகவும் முனைப்பாகவும் இருக்கிறார்கள்.
இதேபோல, அடுக்குமாடிக் கட்டடங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நாடுகளில் கட்டடங்களில் தீப்பற்றுதல் போன்ற ஆபத்தான நேரங்களில் எல்லாம் அந்தத் தீயை அணைப்பதற்கும், பாதிக்கப்படும் மக்களை பாதுகாப்பதற்கும் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. எல்லாவித பாதுகாப்பு வசதிகளும் உறுதி செய்யப்பட்ட பிறகுதான் அடுக்குமாடிக் குடியிருப்புகள் அனுமதிக்கப்படுகின்றன. அதேபோல நம்நாட்டில் கட்டப்படும் உயர்ந்த கட்டடங்களிலும் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசே உறுதி செய்ய வேண்டும். கட்டமைப்பு மற்றும் கட்டடங்களிலும் விஞ்ஞான நோக்கு கண்டிப்பாகத் தேவை.
அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கும் போது கண்டிப்பாக அதைச் சுற்றிலும் மரம், செடி, கொடிகள் வளர்க்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். கட்டடங்களுக்கு ஏற்றபடி மழைநீர் மண்ணுக்குள் இறங்கச் செய்யும் வகையில் குறிப்பிட்ட அளவு மண்தரையில் வெற்றிடம் விடப்பட வேண்டும். வாகனங்கள் எளிதில் போய்வரத்தக்க வழிகள் விடப்படுவதோடு அவற்றை நிறுத்த தகுந்த நிறுத்தங்களுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட வேண்டும். அதுமட்டுமல்ல, சாதாரண மக்கள் நடந்து செல்லத் தக்க நடைபாதைகள் அமைத்து ஆங்காங்கே நவீன கழிப்பிடங்கள் தகுந்த பராமரிப்பின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட வேண்டும் என்பதும் முக்கியம்.
இப்போதெல்லாம் பெரும் நகரங்களில் 50 லட்சம் ரூபாய் விலை பேசப்பட்ட இடம் 3 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது. அந்த வகையில் அடுக்குமாடி குடியிருப்புகளும் அதிகத் தொகைக்கு விலை பேசப்படும் நிலைமை உள்ளது. அதேநேரத்தில் கட்டுமான தர அளவு அப்படியேதான் இருக்கிறது.
இது ஒருபுறமிருக்க மக்களுடைய வருமானம் பெரிய அளவு வளராமல் இருப்பதால் வாங்கும் சக்தி பலவீனமான நிலைமையிலேயே இருக்கிறது. ஆகவே, கண்டிப்பாக சாதாரண, வசதியற்ற நடுத்தர மக்களும் கீழ்த்தட்டு மக்களும் வாங்கக்கூடிய அளவில் ஓர் அறை வீடுகள், இரு அறை வீடுகள் ஊ.ந.ஐ. அடிப்படையில் அதிகரித்து, பத்திரப்பதிவு கட்டணங்களையும் குறைத்து நியாயமாக உழைக்கும் மக்களுக்கும் இந்த வசதிகள் சென்றடைய செய்ய வேண்டும். அந்த விதத்தில் அரசின் சட்டத் திட்டங்கள் விரைந்து மாற்றப்பட வேண்டும்.
பேருந்து நிலையம், ரயில் நிலையம், துறைமுகம், விமான நிலையம், மருத்துவமனை, கல்லூரி போன்ற பொது இடங்களை ஒட்டினாற்போல் உள்ள இடங்கள் கவனமாக பராமரிக்கப்பட வேண்டிய இடங்களாக அறிவிக்கப்பட வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் கட்டடங்களை விரிவாக்கம் செய்ய சட்டப்படி உள்ள சலுகைகளை அதிகரிக்க ஆவன செய்ய வேண்டும். அவ்வாறான இடங்களில் தரக்கட்டுமான அளவு 2 அல்லது 3 பங்கு அதிகரித்து வழங்கும் வகையில் சட்ட திட்டங்கள் மாற்றப்படலாம்.
மாநகராட்சியில் கட்டடம் கட்டும் அளவு ஒன்றாகவும், அதன் அருகிலேயே இருக்கும், நகராட்சியில் அதை விட குறைவாகவும், அதேபோல மத்திய அரசுக்கு சொந்தமான கன்டோன்மென்ட் என்று வெள்ளையர் காலத்தில் ராணுவத்துக்காக பயன்படுத்தப்பட்ட இடங்களில் கட்டடம் கட்டும் அளவு மிகவும் குறைவாகவும் இருப்பது நியாயமில்லை.
ஒரு நகரத்திற்கு அருகிலேயே மாநகராட்சிக்கு சொந்தமான இடம், நகராட்சிக்கு சொந்தமான இடம், ஊராட்சிக்கு சொந்தமான இடம், கன்டோன்மென்ட்டுக்கு சொந்தமான இடங்கள் உள்ளன. அந்த இடங்களில் எல்லாம் மாநகராட்சி வளர்ச்சிக் குழுமமே தலையிட்டு முறைப்படியான கட்டடங்கள் தேவைக்கு ஏற்ப கட்ட உதவ வேண்டும்.
மாறிவரும் சூழ்நிலையில் ராணுவ வசதி பணியிடங்களை இன்று நகர்களுக்கு சற்று அப்பால் சற்று வசதியான இடங்களாகப் பார்த்து சீரமைப்பு செய்தால் அவசரமான சூழ்நிலைகளில் ராணுவ போக்குவரத்து வாகன வசதிகளை விரைந்து சரியான முறையில் பயன்படுத்த முடியும். ஆகவே நகராட்சி, மாநகராட்சி இவைகளை ஒட்டியுள்ள கன்டோன்மென்ட் பகுதிகளில் மாநகர கட்டட அமைப்பு விதிகளை அமல்படுத்தி அதே அளவு கட்டடங்களை கட்ட அனுமத்திக்க வேண்டும்.
அதேபோல் சிறு நகராட்சிகள் பேரூராட்சிகள் போன்றவற்றிலும்கூட கட்டடம் கட்டும் அளவுகள், உயரங்கள் ஆகியவற்றை சீரமைத்து, மக்கள் வசதிக்கேற்ப கட்டடங்கள் கட்டிக் கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும். கிராமங்களை ஒட்டிய பகுதிகளில் கூட நகரங்களில் இருக்கும் வசதிகள் சென்றடைய இதுபோன்ற சட்டத்திட்ட மாற்றங்கள் மிகவும் உதவியாக இருக்கும். இதனால் கிராம மக்கள் வேலைவாய்ப்புக்காக நகர் நோக்கி இடம்பெயரும் நிலை இருக்காது. மாறாக நகர்ப்புறத்தில் உள்ளோர் கிராமப்புறத்துக்குச் செல்ல அதிகமான வாய்ப்பு உண்டு.
நம்நாடு அழகிய நீண்ட கடற்கரை உடைய நாடு என்கிற உலகப் பெருமை உடையதாகும். கடற்கரையை ஒட்டி அரை கிலோமீட்டர் தூரத்துக்கு எந்த கட்டடங்களையும் கட்டக் கூடாது என்ற விதி இருக்கிறது. அதனால் சுற்றுலா பயணிகளின் வருகையும், சுற்றுலா தலங்களை உருவாக்குவதும் பாதிக்கப்பட்டுள்ளது. சிறப்பு சுற்றுலா இடங்கள் என மத்திய அரசு குறிப்பிட்டுள்ள இடங்களில் கட்டடங்கள் கட்டப்படக் கூடாது என்று விதி உள்ளது. மற்ற நாடுகளில் இத்தகைய இடங்களில் எப்படி விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது என்பதை தெரிந்து கொண்டு, நம் நாட்டின் தேவைக்கு ஏற்ப விதிமுறைகளை மாற்றி அமைத்துத் தெளிவான சட்டத்திட்டங்களை உருவாக்கினால் மட்டும்தான் ஏனைய நாடுகளைப் போல நமக்கும் சுற்றுலாப் பயணிகள் மூலம் கிடைக்கும் அன்னியச் செலாவணி அதிகரிக்கும்.
சிறப்பு சுற்றுலாப் பகுதிகள் என்று சில பகுதிகளை மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. அத்தகைய இடங்களில் இருந்து 200 மீட்டர் தொலைவிற்கு கட்டடங்களைக் கட்டக் கூடாது என்ற விதிமுறையையும் வகுத்துள்ளது. அதற்கு அப்பாலும்கூட ஒரு மாடி அளவு மட்டுமே கட்டடங்கள் கட்டலாம் என்ற விதி உள்ளது. இது ஒரு வேடிக்கையான, இயல்புக்கு ஒவ்வாத வரைமுறையாகத் தோன்றுகிறது.
ஒரு கடற்கரையின் அழகை அருகில் சென்று முழுவதுமாக பார்த்து ரசிக்க முடியாது. உயர்ந்த இடத்தில் இருந்து பார்க்கும் போதுதான் அந்த கடற்கரையின் முழு அளவும், அழகும், பிரமிப்பும் தெரிய வரும். அதனால்தான் பல நாடுகளும் கடற்கரை அருகில் பல அடுக்கு மாடிக் கட்டடங்களைக் கட்டியுள்ளன. இயற்கைச் சீற்றங்களான புயல், சுனாமி போன்ற பேரழிவுகளை நாம் எதிர்நோக்கும் இந்த காலத்தில் குறைந்தது 4 அல்லது 5 மாடிக் கட்டடங்கள் இல்லாவிட்டால் பாதுகாப்புப் பிரச்னைகளை சமாளிப்பதும் மிகவும் கடினமான விஷயம்.
அண்மையில் சுனாமி தாக்கியபோது கடற்கரை ஓரமாக இருந்த 2, 3 மாடி கட்டடங்கள் இடிந்து விழுந்தையும் தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளில் தென்னை மரங்கள் எல்லாம் அலையில் அடித்துச் செல்லப்பட்டதையும் நாம் அனைவரும் தொலைக்காட்சி மூலம் காண நேரிட்டது. இத்தகைய நிகழ்வுகளை நாம் கவனத்தில் கொண்டு, தற்போதுள்ள விதிமுறைகளை மாற்றி, 4 அல்லது 5 மாடிக் கட்டடங்கள் கட்டப்பட வேண்டும் என்பதை புதிய விதியாக புகுத்த வேண்டும். பல மாடிக் கட்டடங்கள் இது போன்ற பேரழிவில் பாதிக்கப்படுவதில்லை என்பதை சுனாமி நிரூபித்தது.
இந்தியாவின் இன்றைய யதார்த்த நிலைமை என்ன தெரியுமா? சட்ட திட்டங்களை பின்பற்றுபவர் எவரும் கட்டடங்கள் கட்டமுடியாத நிலைமையும், சட்ட திட்டங்களை மீறுபவர்கள் பல அடுக்கு மாடிக் கட்டடங்களைக் கட்டி மகிழ்ச்சியுடன் லாபம் சம்பாதிப்பது மட்டுமின்றி சட்ட திட்டங்களை மதித்து நடப்பவர்களை ஏளனமாகப் பார்த்து சிரிக்கும் நிலைதான் இருக்கிறது.
முன்பே குறிப்பிட்டதுபோல, மக்கள்தொகைப் பெருக்கமும் கிராமப்புற வேலைவாய்ப்பின்மையும், விவசாயத்திற்கு போதிய ஊக்கமும், முறையான நீர்ப்பாசன வசதிகளும் இல்லாமல் இருப்பதும், நகர்ப்புறங்களை நோக்கி மக்கள் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. நகர்ப்புற வளர்ச்சி, பெரு நகரங்கள் மற்றும் சிறு நகரங்களைச் சுற்றியுள்ள கிராமங்களைக் குடியிருப்புத் தேவைக்காக ஆக்கிரமிக்கச் செய்திருக்கிறது.
அதிகரித்து வரும் குடியிருப்புத் தேவையும், போதுமான அளவு நீர்ப்பாசன வசதி இல்லாமையும், பல விளைநிலங்கள் குடியிருப்புகளாக மாறும் அவலத்துக்கு வழிகோலி இருக்கிறது. நிலப்பரப்பை அதிகரிக்கும் சக்தி மனிதனுக்குக் கிடையாது. குடியிருப்புகளை அதிகரித்துக் கொண்டே போனால், விவசாய நிலங்கள் மட்டுமல்ல, காடுகளும் அழிக்கப்படும் ஆபத்து ஏற்படும். ஏற்கெனவே, தங்களது காடுகளும், தொழிலும் பாதிக்கப்படுவதால் மலைஜாதி மக்களும் ஆதிவாசிகளும் மாவோயிஸ்ட்டுகளின் ஆதரவாளர்களாக மாறி வருவது இதனால்தான்.
முறையான திட்டமிட்ட குடிநீர், வடிகால் ஏற்பாடுகளைச் செய்து, காற்றைப் பயன்படுத்தி அடுக்குமாடிக் கட்டடங்களைக் குடியிருப்புகளாக்குவதும், போதிய நீர்ப்பாசன வசதிகளைச் செய்து கொடுத்து விளைநிலங்களையும், காடுகளையும் பாதுகாப்பதும்தான் இயற்கையின் சீற்றத்துக்கு ஆளாகாமல் நம்மைக் காப்பாற்றிக் கொள்ளும் வழி. இதைத்தான் வளர்ச்சி அடைந்த நாடுகள் செய்து வருகின்றன. பல மாடிக் கட்டடங்களுடன் நகரங்களும், விவசாய வளர்ச்சி பெற்ற கிராமப்புறங்களும் அந்த வளர்ச்சி அடைந்த நாடுகளின் வெற்றிக்குக் காரணங்கள். நாமும் அதைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
“நகரங்களின் வளர்ச்சி, கிராமங்களின் வளர்ச்சியைப் பொறுத்தே அமையும்’ என்ற காந்தியடிகளின் கனவு அப்போதுதான் நனவாகும்.