தினமலர் 14.06.2013
காலாவதியாகிறது வ.உ.சி., உயிரியல் பூங்கா அனுமதி!
கோவை:கோவை மாநகராட்சி வ.உ.சி., உயிரியல் பூங்காவுக்கு, மத்திய வனஉயிரின பூங்கா ஆணையம் வழங்கியுள்ள அனுமதி வரும் ஜூலை 31ம் தேதியோடு நிறைவடைகிறது. அனுமதி புதுப்பிக்கப்படாததால் பூங்காவிலுள்ள வன உயிரினங்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
கோவை மாநகராட்சியில் நேரு ஸ்டேடியம் அருகில், 9.5 ஏக்கர் பரப்பில் கடந்த 1965ல், வ.உ.சி., பூங்கா அமைக்கப்பட்டது. அதில், 4.5 ஏக்கர் பரப்பில் வ.உ.சி., விலங்கியல் பூங்கா அமைக்கப்பட்டு, மாமிச உண்ணிகள், பறவைகள், பாலூட்டிகள், ஊர்வன வகைகள் பராமரிக்கப்படுகின்றன. உயிரியல் பூங்கா நடத்துவதற்கான அனுமதியை, மத்திய வனஉயிரின பூங்கா ஆணையத்திடம், மாநகராட்சி நிர்வாகம் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்க வேண்டும். கடந்தாண்டு வழங்கப்பட்ட அனுமதி வரும் ஜூலை 31ம் தேதியோடு நிறைவடைகிறது.
உயிரியல் பூங்காவில், பறவைகள், பாம்புகள் உள்ளிட்ட வனஉயிரினங்கள் உள்ளதால், அதற்கேற்ப பூங்கா பரப்பு இருக்க வேண்டும். அப்போதுதான், ஆணையம் மூலம் அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம், கோவை மத்திய சிறை அருகே, சிறைத்துறைக்கு சொந்தமான இடத்தில், 25 ஏக்கரில் உயிரியல் பூங்கா அமைக்க, அரசிடம் அனுமதி கேட்டு, தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியுள்ளது. ஆனால், அரசிடம் இருந்து இதுவரை அனுமதி கிடைக்கவில்லை; உயிரியல் பூங்கா அனுமதியை ஆணையமும் புதுப்பிக்கவில்லை.
அடுத்த கட்டமாக என்ன செய்வது என்று தெரியாமல், மாநகராட்சி அதிகாரிகள் தவிக்கின்றனர்.
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், “”கோவை மக்களுக்கு வேறு பொழுதுபோக்கு அம்சம் இல்லாததாலும், பூங்கா மூலம் வன உயிரின விழிப்புணர்வு ஏற்படும் என்பதாலும், சிறைத்துறை இடம் உயிரியல் பூங்காவுக்கு கிடைக்கும் என நம்புகிறோம். உயிரியல் பூங்காவுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக 500 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் விசிட் செய்துள்ளனர். கடந்தாண்டில் 12 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். மத்திய வன உயிரியல் பூங்கா ஆணையத்தின் அனுமதி கிடைத்தால், ஆணையத்தின் நிதியும், சிங்கம், புலி, ஒட்டகச்சிவிங்கி போன்ற உயிரினங்களை வளர்க்க முடியும்” என்றார்.