தினமணி 05.05.2010
காலாவதியான உணவுப் பொருள்களை விற்றால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை
சென்னை, மே.4: காலாவதியான உணவுப் பொருள்களை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் எ.வ.வேலு எச்சரித்துள்ளார்.
காலாவதியான உணவுப் பொருள் விற்பனை குறித்து, சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது சேகர்பாபு (அதிமுக), பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்), வேல்முருகன் (பாமக), மகேந்திரன் (மார்க்சிஸ்ட்), சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்ட்), சதன்திருமலைக் குமார் (மதிமுக), ரவிக்குமார் (விடுதலைச் சிறுத்தைகள்) ஆகியோர் பேசினர். இதற்கு, அமைச்சர் எ.வ.வேலு அளித்த பதில்:
“சென்னை நகரில் வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் காலாவதியான உணவுப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தொலைபேசி மூலம் தகவல் வந்தது. இதையடுத்து உணவுப் பொருள் வழங்கல் துறை இணை ஆணையாளர், குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி சுகாதாரத் துறை அலுவலர்கள் அடங்கிய குழுவினர் கடந்த 30-ம் தேதி சம்பந்தப்பட்ட கிடங்கை ஆய்வு செய்தனர். கிடங்கை வாடகைக்கு எடுத்துள்ள துரைப்பாண்டி என்பவர் ஆய்வு நடத்தப்பட்ட போது வரவில்லை. கிடங்கின் பூட்டு உடைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. காலாவதியான அரிசி, துவரம்பருப்பு, மிளகாய் ஆகிய உணவுப் பொருள்களும், டீத் தூள், புளி, சாக்லேட் மற்றும் சோப்பு பவுடர்கள், பிஸ்கெட், பேஸ்ட் போன்ற காலாவதியான பொருள்களும் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது சோதனையின் போது கண்டறியப்பட்டது.
காலாவதியாகி உள்ள பொருள்களை துரைப்பாண்டி என்பவர் குறைந்த விலைக்கு வாங்கி அப்பகுதி மக்களிடம் சேதம் அடைந்த பொருள்கள் எனக் கூறி குறைவான விலையில் விற்பனை செய்துள்ளார் எனத் தெரிய வந்துள்ளது. பொது மக்கள் நலனுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் காலாவதியான பொருள்களை விற்பனை செய்து வந்த துரைப்பாண்டி மீது ராயபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக, ஜெகன், சுடலை ஈஸ்வரன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தப் பிரச்னையில் தொடர்புடைய துரைப்பாண்டியை போலீஸôர் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர். அனைத்து மாவட்டங்களிலும் காலாவதியான உணவுப் பொருள்கள் உள்ளதா என்பதை ஆய்வு செய்யும் படி மாவட்ட ஆட்சியர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
நேரடியாக கண்டுபிடிக்க சாத்தியம் இல்லை: காலாவதியான உணவுப் பொருள்களை அரசே நேரடியாக கண்டுபிடிக்கும் சாத்தியம் இல்லை. கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கப்படும் பொருள்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு தேவை.
மாணவர்களிடம் நுகர்வோர் நலன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகளில் நுகர்வோர் மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. சட்டத்தைப் பொறுத்தவரை அது காவல் துறையின் கீழ் வருகிறது. ஆனாலும் எங்களுக்குத் தகவல் கிடைத்ததும் துறை அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்து வழக்கைப் பதிவு செய்துள்ளோம். இந்த வழக்கை சுகாதாரத் துறை நடத்தும்.
காலாவதியான உணவுப் பொருள்களை விற்பவர்கள் மீதான சட்டம் இன்னும் கடுமையாக்கப்படும். நுகர்வோர் நலன் குறித்த விழிப்புணர்வை நுகர்வோர் சங்கங்களும், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் எம்.எல்.ஏ.க்களும் ஏற்படுத்த வேண்டும். அரசைப் பொறுத்தவரை அத்தகைய உணவுப் பொருள்களை விற்போர் மீது சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கும்‘ என்றார் எ.வ.வேலு.