தினமணி 05.05.2010
காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை? சூப்பர் மார்க்கெட்டுகள் மீது நடவடிக்கை தேவை
சென்னை, மே. 4: காலாவதியான உணவுப் பொருள்களை விற்பனை செய்யும் சூப்பர் மார்க்கெட்டுகள் மீதும் சட்டம் பாய வேண்டும் என்று சட்டப் பேரவையில் பல்வேறு கட்சிகளும் கோரிக்கை விடுத்தன.
காலாவாதியான உணவுப் பொருள் விற்பனை குறித்து, பேரவையில் செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதம்:
பி.கே.சேகர் பாபு (அதிமுக): காலாவதியான உணவுப் பொருள்களை குடிசைப் பகுதிகளில் வாழும் ஏழை–எளிய மக்கள் வாங்கி பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இந்த காலாவதியான பொருள்களின் விற்பனையில் பல முன்னணி வணிக நிறுவனங்கள் ஈடுபடுகின்றன. அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காலாவதி மருந்து–மாத்திரைகள் மட்டுமல்லாமல் இப்போது காலாவதி உணவுப் பொருள்களும் புழக்கத்துக்கு வந்துள்ளன.
இந்தப் பொருள்களை சாப்பிடுவதால் குடல் புண், மயக்கம், வாந்தி போன்ற உடல் உபாதைகள் ஏற்படுவதாக பொதுமக்களும் மருத்துவரிகளும் தெரிவிக்கின்றனர். காலாவதியான மருந்து மற்றும் உணவுப் பொருள்களை விற்பனை செய்யும் சமூக விரோதக் கூட்டத்தின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான சட்டத்தை கடுமையாக்க வேண்டும். குற்றவாளிகளை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.
பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்): மாநகரங்களில் உணவு பரிசோதகர்களும், நகராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் சுகாதார ஆய்வாளர்களும் உள்ளனர். அவர்கள் பகுதி நேர பணியாளர்களாக இருந்து மட்டுமே பணியை மேற்கொள்கின்றனர். அனைவரையும் முழு நேர பணியாளர்களாக நியமிக்க வேண்டும். உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது. எனவே, மாநிலத்தில் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த தனியாக ஆணையரை நியமிக்க வேண்டும்.
காலாவதியான உணவுப் பொருள்கள் பிடிபடும் போது அதன் மீது யார் நடவடிக்கை எடுப்பது என்பதில் குழப்பம் நிலவுகிறது. எனவே, மருந்து மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தனியாக ஒரு அதிகார அமைப்பை உருவாக்க வேண்டும். நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளுக்கு கடைகளை சோதனை செய்யும் அதிகாரத்தை வழங்க வேண்டும். காலாவதியான உணவுப் பொருள்களை சூப்பர் மார்க்கெட்டுகள் தான் அதிகளவு விற்பனை செய்கின்றன. அவர்கள் மீதும் சட்டம் பாய வேண்டும்.