தினமணி 21.12.2009
காலாவதியான பொருள் விற்பனை: அதிகாரிகள் திடீர் ஆய்வு
கோபி, டிச.20: கோபி நகராட்சிப் பகுதியில் கலப்படப் பொருட்கள் மற்றும் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தகவல் கிடைத்ததையடுத்து, அங்கு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வு செய்தனர்.
கோபி நகராட்சி துப்புரவு அலுவலர் ஆறுமுகம், துப்புரவு ஆய்வாளர்கள் தமிழ்ச்செல்வன், சையத்காதர் மற்றும் நகராட்சிப் பணியாளர்கள், கோபி அரசு மருத்துவமனை வீதி, கடை வீதி, கோபி மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 12 கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.அப்போது கடைகளில் காலாவதியான மஞ்சள்தூள், சாம்பார் தூள் ஆகியவை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் ஒரு கடையிலிருந்த சில பொருள்களின் மாதிரிகளை எடுத்து, கோவையில் உள்ள உணவு கலப்படப் பொருள் கண்டறியும் மையத்துக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அதிகாரிகள் கூறுகையில், பொதுமக்கள் பொருள்களை வாங்கும்போது அவற்றின் தயாரிப்பு தேதி, காலாவதியாகும் நாள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். காலாவதியான பொருள்களை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.