மாலை மலர் 04.05.2010
காலாவதி உணவுபொருளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; சட்டசபையில் அமைச்சர் வேலு எச்சரிக்கை
சென்னை, மே. 4-
சென்னையில் காலாவதி உணவுப்பொருள் சிக்கியது தொடர்பாக சட்டசபையில் இன்று உறுப்பினர்கள் சேகர் பாபு (அ.தி.மு.க.), பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்), வேல்முருகன் (பா.ம.க.) மகேந்திரன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்டு) சதன் திருமலைக்குமார் (ம.தி.மு.க.), ரவிக்குமார் (விடுதலை சிறுத்தை) ஆகியோர் பேசினார்கள். இதற்கு பதில் அளித்து உணவுத்துறை அமைச்சர் எ.வ. வேலு கூறியதாவது:-
சென்னை வண்ணாரப் பேட்டை ஜி.ஏ. சாலை 4-வது சந்தில் உள்ள ஒரு கிடங்கில் காலாவதி உணவுப்பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போனில் தகவல் வந்தது. உடனே துறை இணை ஆணையர், உணவுப் பொருள் வழங்கல்–நுகர்வோர் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி சுகாதார துறையினர், போலீஸ் அதிகாரிகளுடன் அந்த கிடங்கை ஆய்வு செய்தனர்.
அந்த கிடங்கை வாடகைக்கு எடுத்திருந்த துரைப்பாண்டிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை. இதனால் பூட்டை உடைத்து சோதனையிட்டனர்.
அங்கு காலாவதியான அரிசி, துவரம் பருப்பு, மிளகாய், டீ தூள், புளி, சாக்லேட்கள், சோப்பு பவுடர்கள், பிஸ்கட், பேஸ்ட் போன்றவை இருந்தன. அங்குள்ள மக்களிடம் விசாரணை செய்ததில் பெரிய கடைகளில் காலாவதியான பொருட்களை குறைந்த விலைக்கு துரைப்பாண்டி வாங்கி, சேதம் அடைந்த பாக்கெட் என்று சொல்லி குறைவான விலைக்கு மறு சுழற்சியில் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.
அங்கு இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள 47 வகையான உணவு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. துரைப்பாண்டி மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழம், உணவு கலப்பட தடுப்புச்சட்டத்தின் கீழம் நடவடிக்கை எடுக்க போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
ராயபுரம் போலீசார் சட் டப்பிரிவு 273, 420 இந்திய தண்டனை சட்டம் 37, மருந்து அழகுப்சாதனப்பொருட்கள் தடுப்பு சட்டம் 37 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதில் ஜெகன், சுடலை இருவர் கைதாகி உள்ளனர். வியாபாரத்தை நடத்திய துரைப்பாண்டி தலைமறைவாகி விட்டதால் தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகிறார்கள்.
அனைத்து மாவட்டங்களிலும் இதேபோல காலாவதி உணவுப்பொருள் உள்ளதா என்று ஆய்வு செய்ய கலெக்டர்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளது.
நேற்று கோவை மாவட்டத்தில் சோதனை நடத்தி உள்ளனர். இது சுகாதாரத் துறை சம்பந்தப்பட்டது. என்றாலும் நாங்கள் தட்டிக் கழிக்காமல் ஒருங்கிணைந்து செயல்பட்டுள்ளோம்.
இதில் மக்களுக்கும் பெரும் பங்கு உண்டு. அவர்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்.
உயர்நிலைப்பள்ளி, கல்லூரிகளில் நுகர்வோர் மையம் தொடங்கப்பட்டு பெற்றோருக்கும் விழிப்புணர்வை உருவாக்கி வருகிறோம்.
தமிழ்நாட்டில் 6 கோடியே 67 லட்சம் பேர் உள்ளனர். பல சரக்கு கடை, சூப்பர் மார்க்கெட் போன்ற பல கடைகளில் மக்கள் பொருட்கள் வாங்கும்போது, அதுதரமான பொருள்தானா என்பதை பார்த்து வாங்க வேண்டியது அவசியம்.
இந்த விஷயத்தை பொறுத்த வரை குற்றவாளிகள் மீது தமிழக அரசு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கும். முதல்–அமைச்சரிடம் கலந்து பேசி மேலும் கடுமையான சட்டத்தை அமல்படுத்தி நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்படும்.
பன்னாட்டு கம்பெனியில் இந்த பொருட்களை இவர்கள் வாங்கி விற்றது தெரிய வந்தால் அந்த நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் எ.வ. வேலு கூறினார்.