தினமணி 30.09.2009
காலிமனை மீதான வரி விதிப்புக்கு அரசின் புதிய வழிமுறைகள் அறிவிப்பு
பொள்ளாச்சி, செப். 29: தமிழகத்தில் காலிமனை மீதான சொத்துவரி நிர்ணயம் செய்வதில் அரசு புதிய வழிமுறைகளை அறிவித்துள்ளது.
காலி மனை மீதான சொத்துவரி நிர்ணயம் செய்வதில் அமைவிட அடிப்படையில் இடங்கள் ஏ, பி, சி என மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சிகள் மற்றும் சிறப்பு நிலை நகராட்சிகள் “ஏ‘ எனவும் தேர்வு நிலை மற்றும் முதல் நிலை நகராட்சிகள் “பி‘ எனவும், இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் ஆகியவை “சி‘ எனவும் பிரிக்கப்பட்டுள்ளன.
ஏ பிரிவில் குடியிருப்பு பகுதியில் குறைந்தபட்சம் 30 பைசாவும் அதிகபட்சமாக 40 பைசாவும், பி பிரிவில் 15 முதல் 30 பைசா வரையும், சி பிரிவில் 10 முதல் 20 பைசா வரையும் நிர்ணயிக்கலாம்.
முக்கிய சாலை மற்றும் பிரதானச் சாலைகளுக்குச் செல்லும் வழித்தட சாலைகள் அல்லாத இடங்களில் உள்ள காலி மனைகளுக்கு ஏ பிரிவில் 30 முதல் 50 பைசாவும், பி பிரிவில் 20 முதல் 40 பைசாவும், சி பிரிவில் 15 முதல் 30 பைசாவும் நிர்ணயிக்கலாம். முக்கிய சாலைகள் மற்றும் பிரதானச் சாலைகளுக்குச் செல்லும் வழித்தடங்களாக இருந்தால் ஏ பிரிவில் 40 முதல் 60 பைசாவரையும், பி பிரிவில் 30 முதல் 50 பைசா வரையும், சி பிரிவில் 20 முதல் 40 பைசா வரையும் வரிவிதிக்கலாம்.
அரசு நிர்ணயித்துள்ள அளவுகளுக்குள் ஒவ்வொரு நகராட்சியும் தீர்மானம் நிறைவேற்றி காலியிட வரி தொடர்பாக நிர்ணயம் செய்து கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.