தினமலர் 16.04.2010
காலியிடங்கள் ஆக்கிரமிப்பு
ஊட்டி : ஊட்டி நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்கள் மற்றும் மார்க்கெட்டில் உள்ள காலியிடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. ஊட்டியில், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி அவ்வப்போது நடக்கிறது. மார்க்கெட்டிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்றி முறைப்படுத்த, மார்க்கெட் வியாபாரிகளே நகராட்சி அதிகாரிகளிடம் ஒப்புதல் அளித்தனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடக்கும் நிலையில், ஊட்டி நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்கள், மார்க்கெட்டில் உள்ள காலியிடங்களில் ஆக்கிரமிப்பு முளைத்து வருகின்றன.மார்க்கெட்டில் உள்ள நுழைவு வாயில்கள் மற்றும் மார்க்கெட் வெளிப்புறம் உள்ள வணிக வளாகத்தின் முதல் தளம் செல்லும் படிகட்டு பகுதி காலியிடத்தை, சிலர், தற்காலிக வியாபார இடமாக மாற்றி வருகின்றனர். மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு வாடகை செலுத்தி, வியாபாரம் நடத்தும் வியாபாரிகளிடையே, எவ்வித மூலதனமும் இல்லாமல் வியாபாரம் நடத்தும் இந்த ‘திடீர்‘ வியாபாரிகள் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது; இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.