கால்வாயை ஆக்கிரமித்து கட்டிய கட்டிடங்கள் இடித்து அகற்றம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
வேலூர், : கால்வாயை ஆக்கிரமித்து கட்டிய கட்டிடங்களை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தினர்.
புதிய மற்றும் பழைய பஸ் நிலையம், பர்மா பஜார் ஆகிய இடங்களில் பல பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இங்கு மாலையில் நேரத்தில் பார்த்தால் இடம் காலியாக இருக்கும், காலையில் திரும்பி வந்து பார்த்தால் திடீர் கடைகள் முளைத்திருக்கும். பொதுமக்கள் நடந்து செல்ல அமைக்கப்பட்ட நடைபாதைகளையும் ஆக்கிரமித்து கொள்கின்றனர். வேலூர் மாநகராட்சியான பிறகும் கூட ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் மாநகராட்சிக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதோடு பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஆக்கிரமிப்புகள் பற்றி புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை. இவற்றின் பின்னணியில் சில அரசியல்வாதிகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இப்போதெல்லாம் தெரு கால்வாய்களையும் விட்டு வைக்காமல் போட்டி போட்டு ஆக்கிரமிக்கின்றனர். இதன் விளைவு கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டாலும் அவற்றை அப்புறப்படுத்த முடியாத நிலை. ஒரு சிலர் செய்யும் தவறுகளால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்ற இடங்களில் சில நேரம் ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினாலும் ஓரிரு நாட்களிலேயே மீண்டும் ஆக்கிரமிப்பு நடக்கிறது.
இதைத்தொடர்ந்து நேற்று காலை சம்பவ இடத்துக்கு வந்த மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் முருகன் தலைமையிலான அதிகாரிகள் கால்வாய் மீது ஆக்கிரமித்து கட்டிய கட்டிடங்களை புல்டோசர் மூலம் இடித்து அப்புறப்படுத்தினர். சில வீடுகளின் திண்ணைகள், கடைகள், ஆகியவையும் இடிக்கப்பட்டன. அப்போது சிலவீடுகளை சேர்ந்தவர்கள், Ôஒரு நாள் அவகாசம் கொடுங்கள், நாங்களே அகற்றி விடுகிறோம்Õ என்று கூறினர். இதையடுத்து பாதிக்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு மாநகராட்சி அலுவலர்கள் சென்றனர்.
இதுகுறித்து சமுக ஆர்வலர்கள் கூறுகையில், Ôகால்வாயை அகற்றியதோடு நின்று விடாமல், மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும். இந்த விஷயத்தில் அதிகாரிகள் மெத்தனமாக இருக்கக் கூடாது. அதேபோல் அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள் மீண்டும் முளைக்காதவாறு கண்காணிக்க வேண்டும்Õ என்றனர்.