தினமலர் 25.11.2010
காளப்பட்டி பேரூராட்சியில் எரிவாயு மயான பூமி பூஜை
கோவை: கோவை, காளப்பட்டி பேரூராட்சியில் 3 கோடி ரூபாயிலான எரிவாயு மயானம் கட்டுமான பணி துவக்க விழா நேற்று நடந்தது. கோவை, காளப்பட்டி பேரூராட்சியில், “நலம்‘ அறக்கட்டளை சார்பில், எரிவாயு மயானம் கட்டுமான பணி துவக்க விழா பூமி பூஜை நேற்று நடந்தது. கருப்பராயன்பாளையம், முத்தமிழ் நகர் அருகில் நடந்த விழாவில், காளப்பட்டி பேரூராட்சி துணைத்தலைவர் ரகுபதி துவக்கி வைத்தார். காளப் பட்டி பேரூராட்சி தலைவர் பையாக்கவுண்டர் தலைமை வகித்தார். “நலம்‘ அறக்கட்டளை செயலாளர் ராஜன் முன்னிலை வகித்தார். இன்ஜினியர் பன்னீர்செல்வம், ரோட்டரி கிரீன் சிட்டி தலைவர் சண்முகசுந்தரம், இயகோகா நிறுவனத்தின் தலைவர் சுப்ரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கலெக்டர் உமாநாத், அமைச்சர் பழனிசாமி, பேரூராட்சி தலைவர் பையாக்கவுண்டர் பூமி பூஜையில் பங்கேற்று, கட்டட பணியை துவக்கி வைத்தனர். பேரூராட்சி தலைவர் பையாக்கவுண்டர் கூறுகையில்,””எரிவாயுவில் இயங்கும் இந்த மயானம், 3 கோடி ரூபாயில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இறந்த உடலை மூன்று நாட்கள் வரை கெடாமல் வைத்திருக்க குளிர்பதனக் கிடங்கும் அமைக்கப்படும். மின்மயானத்துக்கு உடல்களை கொண்டு வர இரண்டு ஆம்புலன்ஸ்சும் வாங்கப்படும்,” என்றார். கவுன்சிலர் செல்வராஜ் நன்றி கூறினார்.